Published : 26 Sep 2015 10:04 AM
Last Updated : 26 Sep 2015 10:04 AM

பண பலத்தால் நடிகர் சங்கத்தில் பிளவை ஏற்படுத்த முயற்சி: நடிகர் சங்க தலைவர் சரத்குமார் குற்றச்சாட்டு

பண பலத்தால் நடிகர் சங்கத்தில் பிளவை ஏற்படுத்த முயற்சி நடைபெறுகிறது என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான 3-ம் கட்டப் பிரச்சாரக் கூட்டம் மதுரையில் தனியார் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் நடிகர் சரத்குமார் கூறியது:

பண பலத்தால் நடிகர் சங்கத்தில் பிளவை ஏற்படுத்த முயற்சி நடைபெறுகிறது. நடிகர் சங்கத் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிந்தவுடன் வரும் 30-ம் தேதிக்குள் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். நடிகர் சங்கத்தில் அரசியல் குறுக்கீடு உள்ளது. ஆனால் நடிகர் சங்க நிகழ்ச்சிகளில் நாங்கள் ஒருபோதும் அரசியலை புகுத்தவில்லை.

எதிர்தரப்பினர் எங்கள் மீது கூறிவரும் புகார்களுக்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. தற்போது நடிகர் எஸ்.வி.சேகர், விஷால் ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளேன். 10 நாளில் பதில் அளிக்காவிட்டால் குற்ற வழக்கு தொடர்வேன். யாரையும் குறைகூறி நாங்கள் ஓட்டு கேட்க மாட்டோம். தேர்தலுக்கு பின் நடிகர் சங்கத்தில் ஒற்றுமை ஏற்படும் என்றார்.

நடிகர் ராதாரவி பேசியது:

நடிகர் சங்கத் தேர்தலில் ஜாதி, பணம் தலையீடு உள்ளது. நாடக நடிகர்கள் யாரும் பணம் வாங்கிக் கொண்டு நடிகர் இனத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டாம். எங்களுக்கு வாக்களிக்காவிட்டால் எங்களுக்கு நல்லது. வாக்களித்தால் உங்களுக்கு நல்லது.

எதிர்தரப்பினர் வெற்றி பெற்றால் 6 மாதத்தில் நடிகர் சங்கத்தில் இருந்து நாடக நடிகர்களை வெளியேற்றி விடுவார்கள். தோல்வியடைந்தால் வேறு சங்கத்தை ஆரம்பித்துவிடுவார்கள். பொருளாளர் பதவிக்கு கண்ணன், உதவி தலைவர் பதவிக்கு நடிகர் சிம்பு ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்றார்.

இதில் நடிகர் ராம்கி, நடிகைகள் ராதிகா, பாத்திமாபாபு, பசி சத்யா ஆகியோர் கலந்து கொண்டார். மதுரையை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாடக நடிகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x