Last Updated : 03 Oct, 2020 05:30 PM

 

Published : 03 Oct 2020 05:30 PM
Last Updated : 03 Oct 2020 05:30 PM

7 மாதங்களுக்குப் பின் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு: 4 ஆண்டுகளாக கோமாவில் இருப்பவர் மனைவிக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு

மதுரை

மதுரையில் 7 மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், விபத்தில் சிக்கி 4 ஆண்டுகளாக கோமாவில் இருப்பவரின் மனைவிக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

தமிழகத்தில் நீதிமன்றங்களில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடத்தப்படுகிறது. நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்குகள் இரு தரப்பின் சம்மதத்தின் பேரில் மக்கள் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டு தீர்வு காணப்படுகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக பிப்ரவரி மாதத்திலிருந்து மக்கள் நீதிமன்றம் நடைபெறவில்லை. 7 மாதங்களுக்கு பிறகு மதுரை நீதிமன்றத்தில் இன்று சிறியளவிலான மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது.

இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் உட்பட 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதில் ஒரு வழக்கில் விபத்தில் சிக்கி 4 ஆண்டுகளாக கோமாவில் இருந்து வருபவரின் மனைவிக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

விருதுநகரைச் சேர்ந்தவர் ராமர் (50). இவர் விருதுநகரில் பரிசுப்பொருட்கள் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுதா. இரு மகன்கள் உள்ளனர்.

கடந்த 2016-ல் மதுரையிலிருந்து பரிசுப் பொருட்களை வாங்கிக்கொண்டு பைக்கில் விருதுநகர் சென்றார். கள்ளிக்குடி அருகே செல்லும் போது ராமர் சென்ற பைக் மீது கார் மோதியது. இதில் ராமர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றனர். இப்போது வரை அவர் கோமாவில் தான் உள்ளனர்.

இந்நிலையில் ரூ.80 லட்சம் இழப்பீடு கேட்டு ராமர் மனைவி சுதா மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்நதார். இந்த வழக்கு லோக் அதாலத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

மதுரை நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற லோக்- அதலாத்தில் சுதாவின் வழக்கு விசாரிக்கப்பட்டது. இறுதியில் ராமர் குடும்பத்துக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீடு நிறுவனம் சம்மதம் தெரிவித்தது. இதை சுதா ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து ரூ.60 லட்சத்துக்கான காசோலையை சுதாவிடம் மாவட்ட முதன்மை நீதிபதி நசீமாபானு இன்று வழங்கினார்.

சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் வி.தீபா, லோக் அதாலத் தலைவர் கிருபாகரன்மதுரம், விஜிலென்ஸ் நீதிமன்ற நீதிபதி வடிவேல், மூத்த வழக்கறிஞர் அருஞ்சுனை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x