Published : 02 Oct 2020 08:52 PM
Last Updated : 02 Oct 2020 08:52 PM

சென்னை நுங்கம்பாக்கம், தரமணியில் இருவேறு சாலை விபத்தில் 3 இளைஞர்கள் பலி

சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் தரமணியில் நடந்த இருவேறு சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 இளைஞர்கள் தாமாக மோதி உயிரிழந்தனர்.

சென்னையில் ஊரடங்கு விலக்கப்பட்டவுடன் சாலையில் போலீஸார் கண்காணிப்பு குறைந்துள்ளது. அதே நேரம் சாலையில் போக்குவரத்து குறைவாக உள்ளதாலும் வாகனங்கள் கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் பயணிக்கின்றனர். கரோனாவுக்காக முகக்கவசம் அணியும் வாகன ஓட்டிகள் உயிர்க்காக்கும் தலைக்கவசம் அணியாமல் பயணிப்பதும் சென்னையில் வழக்கமாக உள்ளது.

நேற்றிரவு 10 மணி அளவில் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே சாலைத்தடுப்பில் மோதிய இளைஞர்கள் சென்ற இருசக்கர வாகனம் நிலைக்குலைந்து சுவற்றில் மோதி இருவரின் உயிரிழப்புக்கும் காரணமாக அமைந்தது.

சென்னை கோடம்பாக்கம், சிஆர்பி கார்டன் பகுதியில் வசிப்பவர் விஜயராகவன். இவரது மகன் அஜித்குமார் (19). ஏசி மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். இவரது நண்பர் தி.நகர் ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த அஜய் (20). இவர்கள் இருவரும் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே சுதந்திர தின பூங்கா அருகே சென்றுள்ளனர்.

பல்சர் 200 சிசி இரு சக்கர வாகனத்தை அஜித்குமார் ஓட்ட பின்னால் அஜய் உட்கார்ந்தப்படி சென்றுள்ளார். வாகனத்தை ஓட்டிய அஜய் ஹெல்மெட் இருந்தும் அணியாமல் வாகனத்தை இயக்கியுள்ளார். வள்ளுவர் கோட்டம் சாலையில் இருவரும் சுதந்திர தின பூங்கா அருகில் வரும் போது நிலைதடுமாறி பிளாட்பாரத்தின் மேல் ஏறி அருகில் இருந்த சுவர் மீது வேகமாக மோதியது.

இதில் சம்பவ இடத்திலே பின்னால் அமர்ந்திருந்த அஜய் தூக்கி வீசப்பட்டு தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அஜித் குமார் உயிருக்கு போராடிய நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் கொண்டு செல்லும்போது வழியிலேயே உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் அஜய் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அஜித்குமார் உடல் ராயப்பேட்டை சவக்கிடங்குங்கு அனுப்பப்பட்டது.

இதேப்போன்று நேற்றிரவு 10-30 மணி அளவில் தரமணி தனியார் மருத்துவமனையில் அக்கவுண்டன்டாக பணியாற்றிய இளைஞர் ஒருவர் ஹெல்மட் அணியாமல் சென்ற நிலையில் மரத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

ஆதம்பாக்கம், சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் கோபால், இவரது மகன் சதீஷ்குமார்(37). தரமணி தனியார் மருத்துவமனையில் அக்கவுண்டன்டாக பணியாற்றி வந்தார். நேற்றிரவு 10-30 மணி அளவில்பணி முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஹெல்மட் அணியாமல் சென்ற அவர் தரமணி சிஎஸ்ஐஆர் சாலை ticel Bio tec Park கம்பெனி அருகில் வரும்போது வாகனம் நிலைத்தடுமாறி அருகில் இருந்த மரத்தில் மோதியதில் தலை மற்றும் மார்பில் பலத்த காயமேற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் தரமணி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோது வழியிலேயே உயிரிழந்தார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீஸார் 279,304 (A) கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமபவ இடத்தில் சிசிடிவி கேமரா உள்ளது.அதன் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x