Published : 28 Sep 2020 08:37 am

Updated : 28 Sep 2020 08:37 am

 

Published : 28 Sep 2020 08:37 AM
Last Updated : 28 Sep 2020 08:37 AM

சசிகலா விவகாரம் பற்றி பேச தடை?- பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கூட்டாக முடிவு: கடும் கட்டுப்பாடுகளுடன் இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு

admk-meeting

சென்னை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் இன்று கூடும் அதிமுக செயற்குழுவில் தேர்தல் பணிகள், கூட்டணி வியூகம், ஆட்சியை தக்க வைப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாகத் தெரிகிறது.

கடந்த 19-ம் தேதி நடந்த அதிமுக உயர்மட்ட குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் யார், பொதுச் செயலாளர் யார், இரட்டை தலைமையை தொடர்வதா, 11 பேர் கொண்ட வழிகாட்டும் குழு எப்போது அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

கட்சி அலுவலகத்துக்கு வெளியே இருவரின் ஆதரவாளர்களும் போட்டிப் போட்டு ‘வருங்கால முதல்வர் வாழ்க’ என முழக்கம் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியதால் கட்சிக்கும் ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக மூத்த அமைச்சர்கள் கருதுகின்றனர். மேலும் கட்சிக்குள் நிலவும் குழப்பம் தேர்தலில் அதிமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

இந்நிலையில் கட்சியின் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் இன்று செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் எவ்வித சர்ச்சையும் இல்லாமல் நடத்த வேண்டும் என ‌பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் தரப்பினரிடையே பேசப்பட்டுள்ளது.

இதனிடையே சில மூத்த தலைவர்கள் செயற்குழுவில் எவ்வித‌ சர்ச்சையும் இல்லாத வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்காக, முக்கியமான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். இதன் அடிப்படையில் பழனிசாமிதரப்பும் ஓபிஎஸ் தரப்பும் கலந்துபேசி, கூட்டாக ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டத்தில் என்ன நடக்கும்?

இதுகுறித்து அதிமுக தலைமைக்கு நெருங்கிய வட்டாரம் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது:

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடும் செயற்குழு கூட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக முதல் தளத்தில் மட்டும் நடக்கும் செயற்குழு கூட்டம் இம்முறை முதல் தளம் மற்றும் கீழ் தளம் ஆகிய‌ இரண்டு இடங்களில் நடக்கப் போகிறது. எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்பதால் கரோனா தொற்று சோதனை சான்றிதழ், உடல் வெப்ப நிலை, முகக்கவசம், கையுறை, சமூக இடைவெளி ஆகியவற்றை கட்டாயமாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செயற்குழுவில் பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களும் கரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழை காட்டிய பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இதனிடையே நேற்று பரிசோதனை மேற்கொண்ட அதிமுக மூத்த நிர்வாகிகள் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சர்ச்சைகளை தவிர்க்கும் வகையில் கூட்டத்தில் தலைமை உரை, இரு ஒருங்கிணைப்பாளர்களின் உரை உட்பட இன்னும் சிலர் மட்டுமே பேச அனுமதிக்கப்படுவார்கள்.

குறிப்பாக சிறையில் இருந்து விடுதலையாக இருக்கும் சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து யாரும் பேசக் கூடாது. ஏனென்றால் கட்சிக்குள்ளே அதற்கு ஆதரவும், எதிர்ப்பும் இருப்பதால் கட்சித்தலைமை இன்னும் முடிவெடுக்காமல் இருக்கிறது. அதைப் பற்றி இப்போது பேசினால் அதிமுகவில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகும் என்பதால் அதனை தவிர்க்க வேண்டும்.

முதல்வர் வேட்பாளர் யார்?

அதேபோல முதல்வர் வேட்பாளர் யார், பொதுச்செயலாளர் யார் என்பது பற்றி பேசாமல் தவிர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏனென்றால் பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என அவருக்கு ஆதரவான குழு விரும்புகிறது. ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் இதனை எதிர்க்கிறார்கள். முதல்வர் வேட்பாளரை அறிவிக்கக் கூடாது எனக்கூறும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர், அவரை பொதுச்செயலாளராக அறிவிக்க வேண்டும் என்கிறனர்.

இதனை எதிர்க்கும் பழனிசாமி தரப்பு, இரட்டை தலைமையே தொடர வேண்டும் என வலியுறுத்துகிறது. ஆனால் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு 11 பேர் கொண்டவழிக்காட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. இதனைஎதிர்க்கும் பழனிசாமி தரப்பினர், அந்த குழுவில் தங்கள் குழுவைசேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. கடந்த இடைத்தேர்தலைப் போல ‌இரட்டை தலைமையோடு தேர்தலை சந்தித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்றும் கூறியுள்ளனர்.

எனவே சர்ச்சைக்குரிய விவகாரங்களைப் பற்றி ஆழமாக விவாதிக்காமல் மூன்றாம் முறையாக ஆட்சியை பிடிப்பது, தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்கள், கூட்டணி அமைப்பதற்கான வியூகங்கள், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கண்டிப்பது, கரோனா பணிகளுக்கு பாராட்டு, நீட் மற்றும் இந்தி எதிர்ப்பு உள்ளிட்டவை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.


அதிமுக செயற்குழுசசிகலா விவகாரம்பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம்கூட்டாக முடிவுAdmk meeting

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author