Published : 17 Sep 2015 11:30 AM
Last Updated : 17 Sep 2015 11:30 AM

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேட்டில் சிறப்பு சந்தை திறப்பு: பூஜை பொருட்கள் வாங்க அலைமோதும் கூட்டம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை திறக்கப்பட்டுள்ளது. அங்கு பூஜை பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயுத பூஜை, பொங்கல் விழாக்களின்போது மட்டும் மார்க்கெட் நிர்வாக குழு சார்பில் சிறப்பு சந்தைகள் திறக்கப்படும். வழக்கமாக கோயம்பேடு மார்க்கெட்டில் விற்கப்படாத, பூஜைகளுக்கு தேவையான பொருட்கள்கூட இந்த சந்தைகளில் விற்கப்படும். இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், முதல்முறையாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு சந்தை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இங்கு விநாயகர் சதுர்த்தி பூஜைக்குத் தேவையான விநாயகர் சிலைகள் ரூ.150 முதல் ரூ.400, சிலைக்கான குடை ரூ.10, தேங்காய் ரூ.30, கம்பு கதிர் ரூ.5, ஐம்பது தென்னை ஓலை தோரணங்கள் கொண்ட கட்டு ரூ.30, வாழை இலை ரூ.5, பூசணிக்காய் ரூ.50, மக்காச்சோளக்கதிர் ரூ.10, அருகம்புல் கட்டு ரூ.10, இரு வாழைக் கன்று ரூ.40, எருக்கம்பூ மாலை ரூ.20, சாமந்திப்பூ முழம் ரூ.20, கதம்ப பூ முழம் ரூ.25, 1 படி பொரி ரூ.10, உடைத்த கடலை, அவல், நாட்டு சர்க்கரை பொரி செட் ரூ.25, நாட்டு சர்க்கரை கிலோ ரூ.120, ஆப்பிள் கிலோ ரூ.100, சாத்துக்குடி ரூ.60, விளாம்பழம் ரூ.20, பேரிக்காய் ரூ.20, ஒரு சீப்பு வாழைப்பழம் ரூ.40, இருபது கரும்புகள் கொண்ட கட்டு ரூ.50 என விற்கப்படுகிறது.

இந்த சிறப்பு சந்தை நாளை வரை 4 நாட்களுக்கு செயல்படும். பூஜைக் கான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில், நியாயமான விலையில் கிடைப்பதால் மக்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கரும்பு, வாழை விலை சரிவு

மதுரை வியாபாரி வி.மகாராஜன் கூறியபோது, ‘‘ரூ.7 லட்சம் முதலீடு செய்து கரும்புகளை மதுரையில் இருந்து கொண்டு வந்துள்ளோம். ஆனால், பல இடங்களில் இருந்து அதிக அளவில் கரும்பு வந்துள்ளதால், விலை சரிந்துள் ளது. 20 கரும்புகள் கொண்ட கட்டு ரூ.50-க்கு கூட விலை போகவில்லை’’ என்றார்.

‘‘வாழைக் கன்று வரத்தும் அதிகம் உள்ளதால் எதிர்பார்த்தபடி விற்பனை இல்லை. அதனால் சில்லறை விற்பனை யில் இறங்கிவிட்டோம்’’ என்று வேலூர் மாவட்டம் அரசம்பட்டு விவசாயி ஏ.பன்னீர் செல்வம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x