Last Updated : 24 Sep, 2020 01:41 PM

 

Published : 24 Sep 2020 01:41 PM
Last Updated : 24 Sep 2020 01:41 PM

வெட்டும் ஒரு மரத்துக்கு பதில் 10 மரக்கன்று வீதம் வளர்க்க முடியாவிட்டால் மரங்களை வெட்டாதீர்கள்: உயர் நீதிமன்றம்

மதுரை

நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிக்காக வெட்டப்படும் ஒரு மரத்துக்குப் பதில் புதிதாக 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற முடியாவிட்டால் சாலைப் பணிக்காக மரங்களை வெட்ட வேண்டாம் என நெடுஞ்சாலைத்துறையை உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

விருதுநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்தமுருகன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

கன்னியாகுமரி முதல் வாரணாசி வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட போது சாலையின் இரு பக்கங்களிலும் நின்றிருந்த 1.78 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டன.

இதற்குப் பதிலாக விரிவாக்கப்பணி முடிந்ததும் 10 லட்சம் மரக்கன்றுகள் நட்டிருக்க வேண்டும். அதன்படி நெடுஞ்சாலைத்துறை மரங்கள் நடவில்லை.

இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு விசாரணைக்கு வந்தபோது உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலகளில் மரங்கள் நடப்படும் என நெடுஞ்சாலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகும் மரங்கள் நடப்படவில்லை.

எனவே, தேசிய நெடுச்சாலையின் இரு பக்கங்களிலும் மரக்கன்றுகளை நடவும், அவற்றைத் தொடர்ந்து பராமரிக்கவும் நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. நெடுஞ்சாலைத்துறை வழக்கறிஞர் வாதிடுகையில், மரக்கன்றுகளை நடுவது தொடர்பாக வனத்துறையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மரங்களை நடவும், அவற்றை பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

பின்னர் நீதிபதிகள், சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்துள்ளது. பருவமழை 3 மாதம் தாமதமாகவே வருகிறது. இது தொடர்ந்தால் சுற்றுச்சூழல் மேலும் மோசமடையும்.

சாலை மேம்பாட்டுக்கு பணிக்காக ஒரு மரம் வெட்டினால் அதற்கு பதில் 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை பின்பற்றாவிட்டால் சாலை விரிவாக்கத்தின் போது மரங்களை வெட்ட வேண்டாம் என்றனர்.

தொடர்ந்து, சென்னை -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கப் பணியின் போது எவ்வளவு மரங்கள் வெட்டப்பட்டன? அதற்கு பதிலாக எவ்வளவு மரங்கள் நடப்பட்டுள்ளன? என்பது குறித்து சென்னை, மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆணைய இயக்குனர்கள் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை நவ.5-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x