Published : 23 Sep 2020 11:01 AM
Last Updated : 23 Sep 2020 11:01 AM

தந்தை, மகன் கொலை வழக்கில் சாத்தான்குளத்தில் தடயங்களை சிபிஐ சேகரிப்பு: சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை

தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தலைமையில் டெல்லியிலிருந்து வந்திருந்த தடவியல் துறை நிபுணர்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தடயங்களை சேகரித்தனர். சாட்சிகளிடமும் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது.

சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ்(58), அவரது மகன் பென்னிக்ஸ்(35) ஆகியோர் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகள் சாத்தான்குளம் வந்து, பென்னிக்ஸ் கடை அருகே உள்ள வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள், அவரது வீட்டருகே வசிக்கும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், இந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள வழக்கறிஞர் மணிமாறன் அலுவலகத்துக்கு 10 பேரை வரவழைத்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, தந்தை, மகன் மரணம் தொடர்பாக தாமாக முன் வந்து விசாரணை நடத்தி வரும் உயர்நீதிமன்ற மதுரை கிளை, சிபிஐயிடம் எப்போது விசாரணை முடிவுக்கு வரும் என கேள்வி எழுப்பியதுடன், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் பதில் அளிக்கவும் உத்தரவிட்டது.

இந்நிலையில், சிபிஐ ஏடிஎஸ்பி விஜய்குமார் சுக்லா தலைமையில் அதிகாரிகள் மற்றும் டெல்லி தடயவியல் துறை நிபுணர்கள் 17 பேர் நேற்று காலை 12.45 மணிக்கு சாத்தான்குளம் வந்தனர். முதலில் பென்னிக்ஸ் கடைக்கு வந்த அவர்கள் அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும், சம்பவம் நடந்த கடந்த ஜூன் 19-ம் தேதியன்று ஜெயராஜை அழைத்துச்செல்ல வந்த போலீஸ் வாகனம் நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து, அவரது கடை வரை உள்ள தூரத்தை அளவீடு செய்த னர்.

பின்னர் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்குச் சென்று தடயங்களை சேகரித்தனர். அப்போது நாசரேத் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் போலீஸார் உடனிருந்தனர்.

தொடர்ந்து, சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டதுடன் வீடியோ பதிவு செய்தனர். இந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள காவலர்கள் ரேவதி, பியூலா செல்வகுமாரி, வழக்கறிஞர்கள் ரவி, மணிமாறன், ராஜாராம் ஆகியோரிடம் காவல் நிலையத்தில் வைத்து நேற்று மீண்டும் விசாரணை நடத்தி, அவர்களது வாக்குமூலங்களை வீடியோ பதிவு செய்தனர். மாலை வரை இந்த விசாரணை தொடர்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x