Published : 18 Sep 2020 07:03 AM
Last Updated : 18 Sep 2020 07:03 AM

பிரதமரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 70 அடி நீள கேக் வெட்டி எல்.முருகன் கொண்டாட்டம்

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக தலைவர் எல்.முருகன் 70 அடி நீள கேக் வெட்டினார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று71-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார். இதையொட்டி நாடு முழுவதும்செப்.14 முதல் 20-ம் தேதி வரை ‘சேவை வார’மாக கொண்டாட பாஜக முடிவு செய்துள்ளது. அதன்படி, தமிழகத்திலும் பாஜகவினர் கடந்த 14-ம் தேதி முதல் மக்களுக்கு உணவு, மருத்துவ உதவிப் பொருட்கள், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல், மருத்துவ முகாம், ரத்ததான முகாம், நீர்நிலைகளை தூர்வாருதல் போன்ற சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று பிரதமரின் பிறந்தநாள் என்பதால், சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்துக்கு மாநில தலைவர் எல்.முருகன், குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் ஊர்வலமாக வந்தார். பின்னர்,கட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த 70 அடி நீள கேக்கை வெட்டினார்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மோடி பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற எல்.முருகன், 70 அடி உயர கம்பத்தில் பாஜக கொடியை ஏற்றிவைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், ஊடகபிரிவு தலைவர் ஏஎன்எஸ் பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல், தமிழகத்தின் பல பகுதிகளிலும் பாஜகவினர் கேக் வெட்டி, பிரதமரின் பிறந்தநாளை கொண்டாடினர். இதில் பாஜக மாநில வர்த்தகர் அணி துணைத் தலைவர் எஸ்.தணிகைவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சமூக நீதிக்காக போராடியவர் பெரியார்

பிரதமர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘‘பிரதமரின் பிறந்தநாளை சேவை வாரமாக கொண்டாடுகிறோம். மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நீட் கொண்டு வரப்பட்டபோது, அதில் அங்கம் வகித்த திமுக எதிர்க்கவில்லை. இப்போது எதிர்ப்பது நாடகம்தான் என்பதை மக்கள் அறிவார்கள். சமூகநீதிக்காக போராடியவர் பெரியார். அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்வதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x