Published : 13 Sep 2020 07:24 AM
Last Updated : 13 Sep 2020 07:24 AM

திருமழிசை தற்காலிக சந்தையில் உயர்ந்து வரும் காய்கறி விலை: பீன்ஸ் ரூ.90, தக்காளி ரூ.45-க்கு விற்பனை

திருமழிசை தற்காலிக சந்தையில் பெரும்பாலான காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது. அங்கு மொத்த விலையில் பீன்ஸ் கிலோ ரூ.90, தக்காளி கிலோ ரூ.45-க்கு விற்கப்படுகிறது.

வழக்கமாக செப்டம்பர் மாதத்தில் காய்கறிகளின் விலை குறையும் நிலையில், அதற்கு நேர்மாறாக அவற்றின் விலை உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி திருமழிசை சந்தையில் பீன்ஸ் கிலோ ரூ.90, தக்காளி, பச்சை மிளகாய் தலா ரூ.45, வெங்காயம் ரூ.23, சாம்பார் வெங்காயம், கேரட் தலா ரூ.55, கத்தரிக்காய் ரூ.15, உருளைக்கிழங்கு ரூ.34, அவரைக்காய், முருங்கைக்காய் தலா ரூ.50, முள்ளங்கி ரூ.18, பாகற்காய் ரூ.30, முட்டைக்கோஸ், புடலங்காய் தலா ரூ.12, பீட்ரூட் ரூ.20 என விலை உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனை சந்தைகளில் தக்காளி கிலோ ரூ.60, பீன்ஸ் ரூ.110, வெங்காயம் ரூ.30 என விற்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக திருமழிசை சந்தை மொத்த வியாபாரிகள் கூறியதாவது:

கரோனா பொது முடக்கத்தால் பிற மாநிலத் தொழிலாளர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். அதனால் காய்கறிகளை உற்பத்தியாகும் இடத்தில் பறித்து ஏற்றுவது, திருமழிசை சந்தையில் இறக்குவது போன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இருக்கும் தொழிலாளர்களைக் கொண்டே கூடுதல் தொகை கொடுத்து ஏற்றி, இறக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

தற்போது சந்தை திருமழிசையில் இயங்குவதால், கோயம்பேட்டை சுற்றி வாழ்விடத்தை அமைத்துக்கொண்ட தொழிலாளர்களை திருமழிசைக்கு அழைத்துச் செல்லும் செலவை வியாபாரிகளே ஏற்கின்றனர். ஒரு மணி நேரம் முன்னதாக புறப்பட்டு சந்தைக்கு சென்று, பணி முடிந்து வீடு திரும்ப 1 மணி நேரம் தேவைப்படுகிறது. அதற்கு ஏற்ப தொழிலாளர் கூலியும் உயர்கிறது. மேலும் சில்லறை வியாபாரிகளுக்கும் திருமழிசைக்கு வந்து செல்லும் வாகனச் செலவு அதிகமாகிறது. வாரம் ஒரு நாள் விடுமுறை விடுவதால், காய்கறிகள் அழுகி வீணாகின்றன. இந்த செலவுகள் எல்லாம் காய்கறிகள் மேல் ஏற்றப்படுகின்றன. இதன் காரணமாகவே காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. சந்தையை இடமாற்றம் செய்த பிறகுதான் விலை குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x