Published : 18 May 2014 12:45 PM
Last Updated : 18 May 2014 12:45 PM

பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவித்திருந்தால் காங்கிரஸ்தான் மீண்டும் ஆட்சி அமைத்திருக்கும்: முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு பேட்டி

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவித்திருந்தால் மீண்டும் காங்கிரஸ்தான் ஆட்சி அமைத்திருக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு கூறியுள்ளார்.

‘தி இந்து’வுக்கு அவர் சனிக் கிழமை அளித்த பேட்டி:

காங்கிரஸின் மோசமான தோல்வி ஏன்?

கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு பல சேவைகள் செய்து வந்தது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் மிக அதிகமான நலத்திட்டங்களை செய்துள்ளது. அதை மக்களிடம் எடுத்துச் சொல்வதற்கு காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது.

அதற்கு என்ன காரணம்?

ஆட்சி, அதிகார போதையில் இருந்து விட்டார்கள் என்பதுதான் உண்மை. திட்டங்களை மக்களிடம் சொல்லத் தவறியது பெரிய தவறாகும். முக்கிய எதிர்க்கட்சியான பாஜக, பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்த நிலையில், காங்கிரஸில் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முயற்சி நடந்தது.

ஆனால் சிலர் தாங்கள் பிரதமராகலாம் என்ற கனவில் அதைத் தடுத்துவிட்டனர். அவர்களின் பெயர்களைக் கூற முடியாது. ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தி ருந்தால், வேறு விதமான கூட்டணி அமைந்து, மீண்டும் காங்கிரஸே ஆட்சிக்கு வந்திருக்கும். அதைச் செய்ய காங்கிரஸ் தவறி விட்டது.

காங்கிரஸ் வேட்பாளர்கள் எல்லாரும் டெபாசிட் இழந்து விட்டார்களே?

காங்கிரஸில் உள்கட்சி ஜன நாயகம் இல்லை. அதனால்தான் இந்த நிலை வந்துவிட்டது. முதலில் வெளிப்படையாக தேர்தல் நடத்தி மாவட்டம், ஒன்றியம், வட்டம், கிளை என்று ஜனநாயக அடிப்படையில் நிர் வாகிகளை நியமித்தால்தான், கட்சியை வலுப்படுத்த முடியும்.

வேட்பாளர்கள் தேர்வில் ஏற்பட்ட குளறுபடியால் தோல்வியா?

வேட்பாளர்கள் மட்டுமே வெற்றிக்கு காரணமாக முடியாது. வசந்தகுமார் கன்னியாகுமரியில் அதிக வாக்குகள் பெற்றார் என்றால், அந்தத் தொகுதியில் மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அங்கு காங்கிரஸ் வலுவாக உள்ளது.

ராகுல் காந்தியின் நிர்வாகக் குளறு படியும், நிதித்துறையின் தவறான பொருளாதார கொள்கைகளும் காங்கிரஸின் படுதோல்விக்கு காரணமா?

ராகுல் மீதோ, தனிப்பட்ட நிதி மந்திரி மீதோ பழி போட முடியாது. காங்கிரஸின் செயற்குழு, பொதுக்குழு என்ன சொல்கிறதோ, அதைத்தான் மந்திரிகளும் மேல் மட்ட நிர்வாகிகளும் செய்வார்கள். மேலிடம் சொல்வதை மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் செயல்படுத்தவில்லை என்பது பெரும் குறைதான்.

தமிழகத்தில் திமுக, தேமுதிக, காங்கிரஸ் கூட்டணி அமைவதை சிலர் தடுத்ததாக முன்பு கூறியிருந்தீர்கள். அந்தக் கூட்டணி அமைந் திருந்தால் வெற்றி கிடைத்திருக்குமா?

நிச்சயமாகக் கிடைத்திருக்கும். தமிழகத்தில் பாஜக கூட்டணி ஏற்பட்டிருக்காது. தமிழக கூட்டணி நிலவரம், அகில இந்திய அளவிலும் கூட்டணிகளை மாற்றியிருக்கும். பாஜகவில் 25-க்கும் மேற்பட்ட கட்சிகளை இணைத்து நாடு முழுவதும் வலுவான கூட்டணி அமைத்து, கடுமையாக உழைத்தனர். ஆனால் பாஜகவுக்கு இணையாக காங்கிரஸ் கூட்டணியும் அமைக்கவில்லை, உழைக்கவுமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x