Published : 18 May 2014 02:18 PM
Last Updated : 18 May 2014 02:18 PM

புதுச்சேரியில் 19 பேரவைத் தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸுக்கு அதிக வாக்குகள்: பலத்தை இழந்த காங்கிரஸ், திமுக

புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 30 சட்டப்பேரவை தொகுதிகளில் 19 தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.

புதுச்சேரி மக்களவை தொகுதியை பொருத்தவரை புதுவை பிராந்தியத்துக்குள் 23 சட்டப்பேரவை தொகுதிகளும் காரைக்கால் பிராந்தியத்தில் 5 சட்டப்பேரவை தொகுதிகளும் ஏனாம், மாஹே ஆகிய தொகுதிகளும் சேர்த்து மொத்தம் 30 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது 4 பிராந்தியங்களிலும் வாக்குகள் எண்ணப்பட்டன. அப்போது, தொகுதி வாரியாக சுற்றுகள் கணக்கிடப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன.

19 சட்டப்பேரவைத் தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளருக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. ஆனால் காரைக்கால், மாஹே, ஏனாமில் உள்ள 7 தொகுதிகளில் ஒரு இடத்தில்கூட முன்னிலை பெறவில்லை. புதுச்சேரியில் உருளையன்பேட்டை, காலாப் பட்டு, திருபுவனை, அரியாங் குப்பம், முத்தியால்பேட்டை, காமராஜ் நகர், மங்கலம், மண்ணாடிப்பட்டு, கதிர்காமம், ஏம்பலம், லாஸ்பேட்டை, ஊசுடு, ராஜ்பவன், மணவெளி, நெட்டப்பாக்கம், உழவர்கரை, பாகூர், இந்திராநகர், தட்டாஞ்சாவடி ஆகிய 19 தொகுதிகளில் என்ஆர் காங்கிரஸுக்கு அதிக வாக்குகள் கிடைத்தன.

காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு ஏனாம், மாஹே, திருநள்ளாறு, நெல்லித்தோப்பு, வில்லியனூர் ஆகிய 5 தொகுதிகளில் மட்டுமே கூடுதல் வாக்குகள் கிடைத்தன.

காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள திருநள்ளாறு, காரைக்கால் வடக்கு, நிரவி மற்றும் புதுச்சேரியில் உள்ள உப்பளம், முதலியார்பேட்டை ஆகிய 5 தொகுதிகளில் அதிக வாக்குகளுடன் அதிமுக முதலிடம் பெற்றது. திமுக வேட்பாளர் நாஜிமுக்கு அவரது சொந்த தொகுதியான காரைக்கால் தெற்கு தொகுதியில் மட்டும் மற்ற வேட்பாளர்களைவிட அதிக வாக்குகள் கிடைத்தன.

காங்கிரஸ் கட்சிக்கு அதன் தற்போதைய எம்எல்ஏக்கள் உள்ள மங்கலம், காமராஜ் நகர், ராஜ்பவன் தொகுதிகளில் அதிக வாக்குகள் கிடைக்கவில்லை. இதில் காமராஜ் நகர் தொகுதியானது எதிர்க்கட்சித் தலைவர் வைத்திலிங்கம் தொகுதி. இதுபோலவே, அதிமுக வசம் உள்ள நெல்லித்தோப்பு தொகுதியில் நாராயணசாமி அதிக வாக்குகளை பெற்றார்.

இந்த தொகுதியில் 3-ம் இடத்துக்கு அதிமுக தள்ளப் பட்டது. அமைச்சர் சந்திரகாசு தொகுதியான நெடுங்காட்டில் என்ஆர் காங்கிரஸைவிட காங்கிரஸ் கூடுதல் வாக்குகள் பெற்றிருந்தன.

தற்போது புதுச்சேரி சட்டப்பேரவையில் என்ஆர் காங்கிரஸுக்கு 15 எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு சுயேச்சை எம்எல்ஏ ஆதரவும் உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 7, அதிமுக 5, திமுக 2 என்ற எண்ணிக்கையில் எம்எல்ஏக்கள் உள்ளனர். தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் 19 தொகுதிகளில் என்ஆர் காங்கிரஸ் அதிக வாக்குகளை பெற்றிருப்பதால் இதே நிலைமை 2016 சட்டப்பேரவை தேர்தலிலும் எதிரொலிக்கும் என என்ஆர் காங்கிரஸ் கட்சியினர் நம்புகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x