Published : 08 Sep 2020 08:05 AM
Last Updated : 08 Sep 2020 08:05 AM

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு விரைவு பேருந்து, ரயில்கள் இயக்கம்: கரோனா அச்சத்தால் பயணிகள் கூட்டம் குறைந்தது

கரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் இருந்து விரைவுப் பேருந்துகள், சிறப்பு ரயில்களின் சேவை நேற்று தொடங்கியது. இருப்பினும், கரோனா அச்சம் காரணமாக குறைந்த அளவிலேயே மக்கள் பயணம் செய்தனர்.

கரோனா ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டதால், தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டன. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டங்களுக்கு இடையே அரசு, தனியார் பேருந்துகளின் சேவை நேற்று தொடங்கியது.

தமிழகம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்குவதற்கு தயாராக வைக்கப்பட்டன. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, திருநெல்வேலி, மதுரை, விழுப்புரம், கடலூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேற்றுகாலை முதல் விரைவு, சொகுசுப்பேருந்துகள் இயக்கப்பட்டன. போக்குவரத்து ஊழியர்களின் உடல் வெப்பநிலை தெர்மல்ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்பட்டது. அவர்களுக்கு முகக்கவசமும் வழிகாட்டுமுறைகள் குறித்து அறிவுரையும் வழங்கப்பட்டது. பேருந்துகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. 3 இருக்கைகளில் 2 பேரும், இரண்டு இருக்கை உள்ள இடத்தில் ஒருவரும், கடைசி இருக்கையில் 3 பேரும் அமரும் வகையில் குறியீடு அமைக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகள் இயக்கப்பட்ட போதும், கரோனா அச்சத்தால் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

ஒவ்வொரு பேருந்திலும்இருக்கையில் குறியீடு, கிருமிநாசினி தெளித்து பாதுகாப்பான முறையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றி பேருந்துகளில் 50 சதவீத பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், கரோனா அச்சம் காரணமாக வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

40 சதவீதம் பேர் பயணம்

சென்னையில் இருந்து சுமார் 1,000 பேருந்துகள் இயக்கப்பட்டன.

ஒவ்வொரு பேருந்திலும் சுமார் 40 சதவீதபயணிகளே பயணம் செய்தனர். பயணிகளின் வருகை அதிகமாகும்போது, அதற்கேற்ப பேருந்துகளை இயக்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதேபோல, சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் உட்பட பல்வேறு இடங்களுக்கு நேற்று முதல் 11 சிறப்பு ரயில்களின் சேவை தொடங்கப்பட்டுள்ளன. முன்பதிவு செய்திருந்த பயணிகள் மட்டுமே ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதித்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு சிறப்பு ரயிலிலும் சுமார் 500 பேர் வரை மட்டுமே பயணம் செய்தனர்.

ரயில் நிலையங்களின் நுழைவு பகுதிகளில் கை கழுவும் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. பயணிகள் தவிர மற்றவர்களை ரயில் நிலையங்களின் உள்ளே அனுமதிக்கவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு ரயில் சேவை தொடங்கி இருப்பது ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x