Published : 08 Sep 2020 07:48 AM
Last Updated : 08 Sep 2020 07:48 AM

வங்கிகளில் வாங்கிய கடனுக்காக வீட்டுக்கு குண்டர்களை அனுப்பினால் போலீஸில் புகார் அளிக்கலாம்: காவல்துறை அதிகாரி தகவல்

சென்னை

வங்கிகளில் வாங்கிய கடனை வசூலிக்க வீட்டுக்கு குண்டர்களை அனுப்பி மிரட்டினால், போலீஸில் புகார் அளிக்கலாம் என்று காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கரோனா பொது முடக்கத்தால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பொருளாதார ரீதியாக கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், வங்கிகள் மற்றும்நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்கள் வங்கிகளின் நெருக்கடிகளால் தவிப்பதாக புகார் எழுந்துள்ளது.

கடன் பெற்றவர்களிடம் தவணையை வசூலிக்க, அவர்களுக்கு செல்போனில் தொடர்ந்து தொல்லை கொடுப்பதாகவும், வீடுகளுக்கு நேரடியாக சென்று அவமானப்படுத்துவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கட்டப்படாத தவணைக்கு அபராதம் விதித்து கூடுதல் பணம் வசூலிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

வீட்டுக் கடன், வாகனக் கடன்என வங்கிகளில் பெற்ற கடனுக்காக மாதத் தவணை செலுத்த6 மாதங்கள் தளர்வு அளிக்கப்பட்டது. ஆனால், தளர்வளிக்கப்பட்ட மாதங்களில் தவணையை செலுத்தாதவர்களிடம் வட்டிக்கு வட்டிவசூலிப்பது, வங்கிக் கணக்கில்இருக்கும் பணத்தைப் பிடித்துக்கொள்வது ஆகிய நடவடிக்கைகளில் வங்கிகள் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக தனியார் வங்கிகள் மத்திய அரசின் அறிவுறுத்தல்களை கண்டுகொள்ளவேயில்லை என்கின்றனர்.

இந்நிலையில், “வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வங்கிகளுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், வீட்டுக்கு நேரடியாக ஆட்களை அனுப்பி பணத்தை கேட்பதற்கும், மிரட்டுவதற்கும்எந்த அதிகாரமும் கிடையாது.

வங்கிகளில் வாங்கிய கடனுக்காக வீட்டுக்கு குண்டர்களை அனுப்பி மிரட்டினால், உடனே காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு தகவல் கொடுங்கள். அல்லது அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். வீட்டுக்கு வந்த நபர் மீதும், அவரை அனுப்பிய வங்கி மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு அதிகாரம் உள்ளது” என்று காவல் துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x