Published : 06 Sep 2020 05:54 PM
Last Updated : 06 Sep 2020 05:54 PM

மக்களுக்கு என்ன பிரச்சினை என்றாலும் பாமகதான் முதலில் போராடுகிறது; ஆனாலும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை: ராமதாஸ் வேதனை

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவம் 15%க்குக் கீழ் இருந்தால், அதைக் கண்டித்து மிகப்பெரிய போராட்டத்தை பாமக நடத்தும். கடந்த காலத்தில் நடத்தப்பட்ட 7 நாள் தொடர் சாலை மறியல் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களை விடக் கடுமையான போராட்டமாக இருக்கும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்
.
பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (06.09.2020) ஞாயிற்றுக்கிழமை இணைய வழியில் நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்குக் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமையேற்றார். பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

பொதுக்குழுக் கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:

''பாமக தொடங்கி 32 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. அதற்கு முன்பு பத்தாண்டுகள் மக்களுக்காகப் போராடியிருக்கிறேன். ஆனால், பாமகவால் இன்னும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. மக்களுக்கு என்ன பிரச்சினை என்றாலும் நாம்தான் முதலில் போராடுகிறோம். ஆனாலும், நம்மால் ஆட்சிக்கு வர முடியவில்லை.

இதுவரை 29 அமைப்புகளை நான் உருவாக்கியுள்ளேன். இப்போது இளைஞர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழிகாட்டுவதற்காக தமிழ்நாடு இளையோர் மேம்பாட்டு இயக்கம் என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளேன். இது இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்கும். இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையும், அதனால் இளைஞர்களுக்கு கிடைக்கப்போகும் நன்மைகளையும் மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.

தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அந்தப் பிரிவில் 108 சமுதாயங்கள் உள்ளன. அந்த 20 விழுக்காட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கல்வி மற்றும் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது என்பதை அறிந்துகொள்ள நாங்கள் விரும்புகிறோம்.

ஏனென்றால் அந்த இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்காக 7 நாள் தொடர் சாலைமறியல் போராட்டம் உள்ளிட்ட கடுமையான போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றவர்கள் நாங்கள். எனவே 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் கிடைத்த இட ஒதுக்கீட்டின் அளவைத் தெரிவிக்க வேண்டும். அதற்காக ஓர் ஆணையத்தை தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும்.

அதேபோல், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 30 விழுக்காட்டில், அந்தப் பிரிவில் உள்ள ஒவ்வொரு சமுதாயத்திற்கும் எவ்வளவு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த புள்ளிவிவரங்களும் வெளியிடப்பட வேண்டும். மக்கள்தொகை அடிப்படையில் வழங்கப்படும் பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்படும் 18+1 = 19 விழுக்காடு இட ஒதுக்கீடு தவிர மீதமுள்ள 81 விழுக்காட்டில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது என்பதை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்.

இதற்காக இருவர் அல்லது மூவரை உறுப்பினர்களாகக் கொண்ட தனி ஆணையத்தை அரசு உடனடியாக அமைக்க வேண்டும். அந்த ஆணையம் டிசம்பர் மாதத்திற்குள் அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இவை அனைத்தும் 3 மாதங்களில் நடக்க வேண்டும்.

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவம் 15 விழுக்காட்டுக்கும் கீழ் இருந்தால், வன்னியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து மிகப்பெரிய போராட்டத்தை பாமக நடத்தும். கடந்த காலத்தில் நடத்தப்பட்ட 7 நாள் தொடர் சாலை மறியல் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களை விடக் கடுமையான போராட்டமாக இருக்கும். அதை நான் முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கிறேன். அநீதியைக் கண்டித்து நிச்சயமாகப் போராட்டம் நடத்துவோம்.

ஒவ்வொரு நாட்டுக்கும் வான்படை, தரைப்படை, கடற்படை என மூன்று படைகள் இருக்கும். அதேபோல், பாமகவில் அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படை, அன்புமணி மக்கள்படை ஆகிய 3 படைகள் உள்ளன. 90 தொகுதிகளில் இந்தப் படைகளை அமைக்க வேண்டும் என்பதுதான் நமது இலக்கு. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளில் இளைஞர்களும், இளம்பெண்களும் சேர மாட்டார்கள். நமது கட்சியில்தான் இளைஞர்களும், இளம் பெண்களும் அதிக அளவில் சேருவார்கள். மிக விரைவாக இந்தப் படைகளை அமைத்து மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கைகளில் ஒப்படைக்க வேண்டும்''.

இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x