Published : 06 Sep 2020 11:20 AM
Last Updated : 06 Sep 2020 11:20 AM

பெருங்களூர் அருகே காட்டில் குடிசையில் வசிக்கும் மாணவி சத்யா, அவரது தாயுடன் மனநல திட்ட அலுவலர் ஆலோசனை: தாயை மனநல சிகிச்சை மையத்தில் சேர்க்க நடவடிக்கை

போரம் வடக்கிப்பட்டி கிராமத்தில் மாணவி சத்யாவிடம் நேற்று ஆலோசனை மேற்கொள்ளும் மாவட்ட மனநல திட்ட அலுவலர் ஆர்.கார்த்திக் தெய்வநாயகம்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் பெருங் களூர் அருகே உள்ள போரம் வடக்கிப்பட்டி கிராமத்தில் மனநலம் பாதித்த தன் தாய் செல்வ மணியுடன் வசித்து வருபவர் மாணவி சத்யா.

பிளஸ் 2 முடித்துவிட்டு மேல் படிப்புக்காக பல்வேறு கல்லூரிகளில் விண்ணப்பித்துள்ள இவர், தந்தை இறந்துவிட்ட நிலையில், தினக்கூலி வேலைக்கு சென்று தாயாரை காப்பாற்றி வருவதுடன் குடும்பத்தை நடத்தி வருகிறார்.

மனைப்பட்டா, வீடு இல்லாமல் காட்டில் குடிசையில் வசித்துவரும் இவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை குறித்து, ‘இந்து தமிழ்’ நாளிதழில் நேற்று முன்தினம் படங்களுடன் செய்தி வெளியானது.

இதையடுத்து, மனைப்பட்டா வழங்கவும், அரசு சார்பில் வீடு கட்டித் தரவும் மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி அன்றைய தினமே நடவடிக்கை மேற்கொண்டார். ஓரிரு நாட்களில் மனைப்பட்டா வழங்கப்பட உள்ளது. மேலும், வீடு கட்டுவதற்கான உத்தரவும் அளிக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணனும் நேரில் சென்று சத்யா மற்றும் அவரது தாய் செல்வமணிக்கு நேற்று முன்தினம் ஆறுதல் கூறியதுடன், சத்யா உயர் கல்வி பயில்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக தெரிவித்தார்.

இந்நிலையில், ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து மாவட்ட மனநல திட்ட அலுவலர் ஆர்.கார்த் திக் தெய்வநாயகம், நேற்று போரம் வடக்கிப்பட்டி கிராமத்துக்கு நேரில் சென்று சத்யா மற்றும் அவரது தாயார் செல்வமணி ஆகியோரிடம் தனித்தனியாக 2 மணி நேரம் ஆலோசனை செய்தார்.

செல்வமணியின் மனநலம் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்த அவர், புதுக்கோட்டை முத்துலெட்சுமி ரெட்டி அரசு மருத்துவமனையில் உள்ள மனநல சிகிச்சை மையத்தில் செல்வமணியைச் சேர்த்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொண்டார். மேலும், குடும்பச் சூழலால் மன இறுக்கத்துடன் காணப்பட்ட சத்யாவுக்கு தைரியம் கொடுக்கும் விதமாக ஆலோசனைகளை வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x