Published : 05 Sep 2020 10:23 AM
Last Updated : 05 Sep 2020 10:23 AM

கரோனா காலத்திலும் விபத்து மற்றும் அவசரகால சிகிச்சை மையங்களில் சிறப்பான சிகிச்சை; அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

கரோனா காலத்திலும் விபத்து மற்றும் அவசரகால சிகிச்சை மையங்களில் சிறப்பான சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (செப். 5) வெளியிட்ட அறிக்கை:

"தமிழக அரசு, முதல்வரின் தலைமையில் கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே வேளையில், விபத்து மற்றும் அவசர கால சகிச்சைகள் தங்கு தடையின்றி சிறப்பான முறையில் அளித்திட தமிழ்நாடு முதல்வரால் அறிவுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முன்னெடுப்பு திட்டத்தின் கீழ் செயல்பட்டுவரும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்களில் மார்ச் 2020 முதல் இதுவரை 1 லட்சத்து 52 ஆயிரத்து 118 நபர்களுக்கு விபத்து உள்ளிட்ட நிகழ்வுகளால் ஏற்பட்ட காயங்களுக்கு அவசரகால சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவர்களில் 63 ஆயிரத்து 633 நபர்களுக்கு உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில், விஷம் அருந்துதல் உள்ளிட்ட சுய தீங்கு ஏற்படுத்திக் கொண்ட 52 ஆயிரத்து 849 நபர்களுக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாம்பு கடித்த 19 ஆயிரத்து 947 நபர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 4,494 குழந்தைகளுக்கு அவசரகால உயிர்காக்கும் சிகிச்சைகளும், 4,432 நபர்களுக்கு மாரடைப்புக்கான சிகிச்சைகள், 7,775 நபர்களுக்கு பக்கவாத நோய்க்கான சிகிச்சைகள் என மொத்தம் 2 லட்சத்து 41 ஆயிரத்து 615 நபர்களுக்கு அவசரகால சேவைகள் அளிக்கப்பட்டு விலை மதிப்பில்லாத உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வரின் மக்கள் நலன் காக்கும் பணிகள் மூலம் கரோனா வைரஸ் தொற்று காலத்திலும் தமிழக அரசின் தொய்வில்லா செயல்பாடு அனைவரின் கவனத்தையும் தொடர் பாராட்டினையும் பெற்றுவருகிறது"

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x