Published : 04 Sep 2020 11:48 AM
Last Updated : 04 Sep 2020 11:48 AM

கொடைக்கானல் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்காத ஊரடங்கு தளர்வு

ஊரடங்கு தளர்வு அறிவித்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாததால் கொடைக்கானல் மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து கேள்விக்குறியாகி வருகிறது. சுற்றுலா தலங்களுக்கு இ-பாஸ் அவசியம் என்ற போதும் மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு வழிமுறையையும் அறிவிக்காததால் கொடைக்கானலில் வீடு வைத்துள்ளோர்கூட அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மலைகளின் இளவரசியான கொடைக் கானலில் உள்ள மக்கள் பெரும்பாலானோரின் வாழ்வாதாரம் சுற்றுலாப் பயணிகளை நம்பியே உள்ளது. கடந்த 5 மாதங்களாக கரோனா ஊரடங்கால் சுற்றுலாத் தலங்கள் முற்றிலும் முடக்கப்பட்டதால் விடுதி உரிமையாளர்கள், அதில் வேலை செய்வோர், சிறு வியாபாரிகள் என சுற்றுலாவை நம்பியுள்ள அனைத்துத் தரப்பினரின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக் கப்பட்டது.

கொடைக்கானலில் கடைகள் திறக்கப்பட்டிருந்தும் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்ட ஏரிச்சாலை. (உள்படம்) அப்பாஸ்.இந்நிலையில் தமிழக அரசு செப்டம்பர் தொடக்கம் முதல் ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது. இதில் விடுதிகளைத் திறக்கலாம், கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு இ-பாஸ் பெற்றுச் செல்லலாம் என்றும் அறிவிப்பு வெளியிட்டது.

இதையடுத்து கொடைக்கானல் விடுதி உரிமையாளர்கள், சிறு வியாபாரிகள் உள் ளிட்ட சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ளோர் கடைகளைத் திறந்தால் ஓரளவாவது மக்கள் வந்து செல்வர். படிப்படியாக வாழ்வாதாரத்தை மீட்கலாம் என மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், விடுதிகள், கடைகளைத் திறந்துவைத்து காத்திருந்தோருக்கு சுற்றுலாப் பயணிகள் போதிய அளவில் வராததால் ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது கொடைக்கானலுக்கு வத்தலகுண்டில் இருந்து ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது.

அப்பாஸ்

அதிலும் கொடைக்கானல் முகவரி உடைய அடையாள அட்டையைக் காட்டினால் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் காரில் வருவோர், பேருந்துகளில் வருவோர் என மக்கள் வருகை முற்றிலும் இல்லாததால் ஊரடங்கின் பழைய நிலையே தொடர்கிறது. இதனால், சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ள கொடைக்கானல் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது தொடர் கதையாகி உள்ளது.

கொடைக்கானலைச் சேர்ந்த அப்பாஸ் கூறியதாவது: சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல அரசு விதித்த கட்டுப்பாடு மற்றும் இ-பாஸ் நடைமுறையால் பயணிகள் வருகை தற்போது வரை இல்லை. கொடைக்கானல் வர விண்ணப்பித்த ஒருவருக்குக்கூட இ-பாஸ் கிடைக்கவில்லை என்றே கூறுகின்றனர்.

நீலகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள வழிமுறைகளைப்போல திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தெளிவான வழிமுறைகளை அறிவிக்க வேண்டும். 5 மாதங்களுக்குப் பிறகு தமிழக அரசு அறிவித்த தளர்வால் வாழ்வாதாரம் மீளும் என்ற நம்பிக்கையில் இருந்த கொடைக்கானல் மக்களுக்கு, மீண்டும் பழைய நிலையே தொடர்வதால் வேதனை அடைந்துள்ளனர்.

அரசு இ-பாஸ் முறையை ரத்து செய்து கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாப் பயணிகளை அனுமதித்தால்தான் கொடைக்கானல் மக்களின் வாழ்வாதாரம் சிறுகச் சிறுக மீண்டெழும். இல்லையேல் கரோனாவால் ஏற்படும் பாதிப்பைவிட அதிக பாதிப்பு மக்களுக்கு ஏற்படும் என்பதே உண்மைநிலை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x