Last Updated : 03 Sep, 2020 08:54 PM

 

Published : 03 Sep 2020 08:54 PM
Last Updated : 03 Sep 2020 08:54 PM

வன உயிரினங்கள் கடத்தலைத் தடுக்க சிபிசிஐடியில் தனிப்பிரிவு தொடங்கப்படுமா?- மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் வன உயிரினங்கள் கடத்தலை தடுக்க சிபிசிஐடியில் தனிப்பிரிவு தொடங்கக்கோரி தாக்கலான மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் அதலையைச் சேர்ந்த புஷ்பவனம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அரிய வகை உயிரினங்கள், விலங்குகள், மரங்கள் உள்ளன. இங்கு 229 வகையான அரிய மரங்கள், 31 வகையான பாலூட்டிகள், 15 வகையான பறவைகள், 43 வகையான ஊர்வனங்கள் உள்ளன.

இந்த அரிய வகை உயிரினங்கள், மரங்களை பணத்துக்காக கடத்துவதும், அழிப்பதும் தற்போது அதிகளவில் நடைபெறுகிறது. இந்த குற்றச் செயல்களில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் செயல்களால் தட்ப, வெட்ப நிலை மாற்றமடைவதுடன், புவி வெப்பமயமாதலும் அதிகரிக்கிறது.

இந்த குற்றங்களை தடுக்க வனத்துறையில் போதுமான காவலர்கள் இல்லை. கர்நாடகா, அசாம் மாநிலங்களில் போலீஸார் வனக்குற்ற வழக்குகளை விசாரிக்கின்றனர்.

இதனால் தமிழகத்தில் சிபிசிஐடி காவல் பிரிவில் வனக்குற்றங்களை விசாரிக்க தனிப்பிரிவு தொடங்க உத்தரவிட வேண்டும். மேலும் உதவி காவல் ஆய்வாளர் தகுதிக்கு குறையாத காவல்துறை அதிகாரிகளுக்கு வனக்குற்ற வழக்குகளை விசாரிக்க அதிகாரம் வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு விசாரித்து, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்.7-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x