Published : 03 Sep 2020 07:47 PM
Last Updated : 03 Sep 2020 07:47 PM

கரோனா சிகிச்சை நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி முறைகேடு; பரிசோதனை முடிவுகள் தாமதத்தால் தொற்று பரவுகிறது: மா.சுப்பிரமணியன் விமர்சனம்

கரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கைக்களுக்காக சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் சுமார் ரூ.150 கோடி வரை செலவழிக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கும் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படவில்லை. ஒப்பந்த விதிகள் எதுவும் கடைப்பிடிக்கப்படவில்லை. மக்களின் வரிப்பணத்தை மாநகராட்சி நிர்வாகம் முறையற்ற வழியில் செலவழித்துக் கொண்டிருக்கிறது என திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

“கிண்டியில் தொடங்கப்பட்ட மருத்துவமனையில் இதுவரை மருத்துவர்களை நியமிக்கப்படவில்லை. ராஜீவ் காந்தி மருத்துவமனையிலிருந்தும், ஓமந்தூராரிலிருந்தும் மருத்துவர்களை நியமிக்கிறார்கள். அறிகுறி இல்லாதவர்களை வீட்டில் தனிமைப்படுத்துகிறார்கள்.

மூச்சுத்திணறல், சுவாசக்கோளாறு உள்ள கரோனா நோயாளிகளை தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்படவேண்டும். அங்கு சிறப்பு மருத்துவர்கள், முதுகலைப் பட்டப்படிப்பு படித்த மருத்துவர்கள் நியமிக்கப்படவேண்டும். ஆனால், கடந்த 5 மாதங்களில் ஒருவரைக் கூட நியமிக்கவில்லை.

இப்படி எங்குமே தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்படாத காரணத்தால்தான் தமிழகத்தில் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளதாக அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் உண்மை அது அல்ல. தமிழகத்தில் 1.7% இறப்பு விகிதம் உள்ளது. ஆனால், பக்கத்தில் உள்ள கேரளாவில் 0.4% ஆக உள்ளது. பக்கத்தில் உள்ள மாநிலத்தில் குறைவான இறப்பு விகிதம் உள்ள நிலையில் அதைப் பார்த்தாவது இறப்பு விகிதத்தைக் குறைப்பது எப்படி என்கிற விஷயத்தை ஆளும் அரசு தெரிந்து செயல்படுத்தியிருக்க வேண்டும்.

சமீபத்தில் ஒரு ஆங்கில ஏடு இந்தியாவில் அதிக இறப்புகள் நடக்கும் 16 நகரங்கள் எனத் தேர்வு செய்து, அதில் 8 நகரங்கள் தமிழகத்தைச் சேர்ந்தவை என்கிற பட்டியலைப் போட்டிருந்தது. சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருச்சி, திருவள்ளூர், தூத்துக்குடி, விருதுநகர், தேனி ஆகியவை அந்த 8 நகரங்கள் ஆகும்.

ஜூன் 23-ம் தேதி திமுக தலைவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். பிளீச்சிங் பவுடர், தெர்மல் ஸ்கேனர் வாங்கும்போதுகூட அதில் ஊழல் பெருக்கெடுத்துள்ளது. மக்கள் உயிரோடு விளையாடுகிறார்கள் என்று தெரிவித்தார். அதிலும் இந்த ஆட்சியாளர்கள் விழித்துக் கொள்ளவில்லை. ஆகஸ்டு 15-ம் தேதி உயர் நீதிமன்றமே சென்னை மாநகராட்சியில் ஊழல் மலிந்துவிட்டது என்று தெரிவித்தது.

கடந்த ஆகஸ்டு 30-ம் தேதி அன்று சென்னை மாநகராட்சி ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இவர்களும் குற்றவாளிகளுக்குத் துணையாகச் செயல்படுகிறார்களா எனச் சந்தேகம் எழுகிறது என்று உயர் நீதிமன்றம் சாட்டையடி கொடுத்துள்ளது. இப்படித் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் இந்தக் கரோனா தொற்று நடவடிக்கைகளிலும் கூட முறைகேடுகளில் ஈடுபடுவது வருத்தத்தைத் தருகிறது.

சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ. 6 கோடி முதல் ரூ.10 கோடி வரை செலவழித்துள்ளார்கள். 15 மண்டலங்களில் ரூ.150 கோடி வரை செலவழிக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கும் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படவில்லை, ஒப்பந்த விதிகள் எதுவும் கடைப்பிடிக்கவில்லை. மக்களின் வரிப்பணத்தை மாநகராட்சி நிர்வாகம் முறையற்ற வழியில் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடைசியாக தமிழக அரசும் மாநகராட்சியும் இனி கரோனாவைத் தடுத்து நிறுத்த நம்மால் முடியாது என்று கைகழுவியுள்ளார்கள். நேற்று சென்னை மாநகராட்சி ஆணையர், இனி தடுப்பு வேலிகள் போடப்படாது என்று சொல்லிவிட்டார்.

கரோனா பாதிக்கப்பட்டவர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். அரசு ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை எடுத்து அதன் சோதனை முடிவு வர 2 அல்லது 3 நாள் வரை ஆகிறது. ஆனால், தனியார் மருத்துவமனையில் சில மணி நேரங்களில் தெரிகிறது.

இரண்டு மூன்று நாட்கள் கழித்து முடிவு அறிவிக்கும்போது அந்த 3 நாட்கள் அவர்கள் நடமாடிய இடங்களில் எல்லாம் தொற்றுப் பரவிக்கொண்டே இருக்கும். எனவே, பிசிஆர் பரிசோதனையை மிகவும் எளிமைப்படுத்தி சில மணி நேரங்களில் சோதனை முடிவை அறிவித்தால் மட்டுமே தொற்றுப் பரவலைத் தடுக்க முடியும்.

இன்னமும்கூட இந்த அரசு சமூகப் பரவல் இல்லை எனச் சாதித்துக்கொண்டிருக்கிறது. முதல்வர் பழனிசாமி சேலம் விழாவில் செய்தியாளர்களைப் பார்த்து, 'சமூகப் பரவல் என்கிறார்களே! உங்களுக்கு எல்லாம் வந்துவிட்டதா?' என்று கேட்கிறார். இப்படிப்பட்ட ஒரு அறியாமையில் உள்ள முதல்வரை, அமைச்சர்களைத் தமிழகம் பெற்றுள்ளது. அதனால்தான் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை, இறப்பு எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது.

இன்றைக்கு பொது முடக்கத்தைத் தளர்த்துவதாக அறிவித்துள்ளார்கள். அதில் தவறேதும் இல்லை, ஆனால், பொது முடக்கத்தைத் தளர்த்துவதால் நோய்த்தொற்று குறையும். பொருளாதாரம் உயரும் என்பது அர்த்தம் அல்ல என திமுக தலைவர் தெரிவித்து சாதாரண மக்கள் பொருளாதாரம் மேம்பட, பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு, அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 5000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இனிமேலாவது மாநில அரசு மக்களுக்கு உதவ வேண்டும் எனத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கோயம்பேட்டில் 15,000 வணிகர்கள் உள்ளனர், லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். அது ஹாட் ஸ்பாட்டாக மாறியதற்குக் காரணமே தமிழக அரசுதான். கோயம்பேடு வியாபாரிகள் ஆரம்பத்திலேயே சில யோசனைகளைச் சொன்னார்கள். வாரத்திற்கு ஒரு முறை விடுமுறை விடுகிறோம். உங்களுக்கு ஒத்துழைப்புத் தரத் தயாராக இருக்கிறோம், சுத்தம் செய்வது பராமரிப்பது போன்ற பணிகளுக்கு அந்த நேரத்தைச் செலவிடுங்கள் என்று சொன்னார்கள் ஆனால், அரசு அதைக் கேட்கத் தயாராக இல்லை.

தற்போதும் அந்த நிலைதான் உள்ளது, இப்போதும் அங்கு நிலை மாறவில்லை. வருங்காலத்தில் கரோனா மட்டுமல்ல, வேறு ஏதாவது நோய்ப்பரவல் வந்தாலும் அங்கிருந்துதான் வரும். தன்னார்வலர்கள், அக்கறையுள்ளவர்கள் தாங்கள் உதவி செய்யும் பொருளை தமிழக அரசிடம் அளித்தார்கள்.

ஆனால், சென்னை மாநகராட்சியில் வெளிப்படைத்தன்மையே இல்லை. சென்னை மாநகராட்சி ஆணையருக்குக் கடிதம் எழுதி 11 கேள்விகள் கேட்டிருந்தேன். சமூக ஆர்வலர்கள் தன்னார்வலர்கள் கொடுத்த பொருட்கள் எவ்வளவு வந்தன, எவ்வளவு விநியோகித்தார்கள் என்கிற கணக்கை அவர்கள் சொல்லியே ஆகவேண்டும்.

பரவலைத்தடுக்க அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. சட்டப்பேரவைக் கூட்டத்திலேயே முகக்கவசம் தாருங்கள், ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யுங்கள் என்று திமுக உறுப்பினர் கேட்டபோது அமைச்சர் மறுத்தார்.

அப்போது முதல்வர் பழனிசாமி, 70 வயதைத் தாண்டியவர்களைத்தான் தாக்கும். அண்ணன் துரைமுருகன் பயப்பட வேண்டாம் என்றார். ஆனால், இன்று ஒரு வயதுக் குழந்தைக்குக்கூட கரோனா தொற்று ஏற்படுகிறது. இது பணக்காரரகளை மட்டுமே பாதிக்கும் என்று முதல்வர் கூறினார். ஆனால், கோயம்பேட்டில் கீரை விற்பவர்கள், காய்கறிகள் விற்பவர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டார்கள்.

சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை களப்பணியாளர்கள் 200 வட்டங்களில் வட்டத்துக்கு 100 பேர் என கடுமையாக வேலை வாங்கினார்கள். அவர்களுக்கு உணவு இலவசமாக வழங்கப்பட்டது. 31-ம் தேதிக்குப் பிறகு அதுவும் இல்லை என்று தெரிவித்துவிட்டார்கள். பணியாளர்களை நசுக்கித் தூர எறிவது அதிமுக ஆட்சியின் வேலையாக உள்ளது.

முகக்கவசம் தற்போது 3 ரூபாய்க்குக்கூட கிடைக்கிறது. ஆனால், அரசு கொடுக்கும் முகக்கவசம் இட்லி அவிக்கும் துணி போல இருந்தது என மீம்ஸ் போட்டார்கள். ரேஷன் கடைகளில் கொடுக்கும் முகக்கவசங்கள் தரமானதாக இருக்கவேண்டும்.

சட்டப்பேரவையைப் பொறுத்தவரை கரோனாவுக்குப் பயந்து கலைவாணர் அரங்கைப் பயன்படுத்த யோசிக்கின்றனர். தற்போது கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து 3 நாள் கூட்டத்தை நடத்த உள்ளனர். அன்றே இந்தப் பிரச்சினைக்காக தலைவர் கலைஞர் புதிய சட்டப்பேரவையைக் கட்டினார். ஆனால் அதை மருத்துவமனையாக மாற்றியதன் விளைவு, இன்று மூன்று நாள் கூட்டத்திற்குப் பல கோடி மக்கள் வரிப்பணம் வீணாகிறது”.

இவ்வாறு மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x