Published : 03 Sep 2020 04:18 PM
Last Updated : 03 Sep 2020 04:18 PM

தான் தாக்கப்பட்டதாக நீதிபதியிடம் சயான் புகார்: போலீஸாருக்கு நீதிபதி எச்சரிக்கை

நீதிபதியிடம் தன்னை காவல்துறையினர் தாக்கியதாக சயான் கூறிய நிலையில், பாதுகாப்பு போலீஸாரை நீதிபதி பி.வடமலை எச்சரித்தார்.

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் சிறையில் உள்ள நிலையில், மற்ற 8 பேர் ஜாமீனில் வெளியே உள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கரோனா காலத்தால் விசாரணைக்குக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை 3 மாதத்துக்குள் முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதன் பேரில் வழக்கு விசாரணை கடந்த மாதம் 21-ம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் சிறையில் உள்ள சயான் மற்றும் மனோஜை தவிர மற்ற 8 பேர் ஆஜராகவில்லை.

இதனால், விசாரணைக்கு ஆஜராகாத 8 பேருக்கு பிணையில் வெளியே வர முடியாத பிடியாணையை நீதிபதி பி.வடமலை பிறப்பித்து, விசாரணையை ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (செப். 3) விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு சயான், மனோஜ், உதயன் மற்றும் மனோஜ் சமி ஆகிய நான்கு பேர் மட்டுமே ஆஜராகினர்.

விசாரணை தொடங்கியதும் அரசு வழக்கறிஞர் பால நந்தகுமார், "குற்றம்சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு ஆஜராகாமல் வழக்கை இழுத்தடிக்க முயற்சி செய்கின்றனர். சென்னை உயர் நீதிமன்றம் 3 மாதத்துக்குள் விசாரணையை முடிக்க அறிவுறுத்தியுள்ள நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களை ஆஜர்படுத்த வேண்டும்" என நீதிபதியிடம் மனு அளித்தார்.

குற்றம்சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர் ஆனந்த், "தற்போது 4 பேர் ஆஜராகியுள்ளனர். ஜம்சீர் அலி வேறு வழக்கில் கேரள சிறையில் உள்ளார். மீதமுள்ள 5 பேரும் விசாரணைக்கு ஆஜராக தயாராக உள்ளனர். அவர்களுக்கு இ-பாஸ் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இ-பாஸ் கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் சரணடைவார்கள்" என்றார்.

இதை கேட்ட நீதிபதி பி.வடமலை, வரும் 8-ம் தேதி குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என கூறி விசாரணையை வரும் 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், சயானின் வழக்கறிஞர் ஆனந்த், காவல்துறையினர் சயானை தாக்கியதாக தெரிவித்தார். இதை கேட்ட நீதிபதி பி.வடமலை, சயானிடம், "நீங்கள் நீதிமன்ற காவலில் தான் உள்ளீர்கள். உங்களை காவல்துறையினர் தாக்கியிருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உயர் நீதிமன்றம் உங்களை பேட்டி அளிக்கவோ, பேசவோ கூடாது என கூறியுள்ளது. அதை மீறி செயல்பட கூடாது" என்றார்.

மேலும், நீதிபதி பி.வடமலை பாதுகாப்பு போலீஸாரை அழைத்து, சயானை தாக்கியதாக தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

சயான் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்தவுடன், அவர் செய்தியாளர்களிடம் பேசாதவாறு, காவலர்கள் அவரை கவனமுடன் வாகனத்தில் ஏற்றிச்சென்றனர்.

செய்தியாளர்கள் அவரிடம் பேச முற்பட்ட போது, தனக்கு வாய் பூட்டு போட்டுள்ளதாக சைகை மூலம் தெரிவித்து வாகனத்தில் ஏறி சென்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x