Last Updated : 01 Sep, 2020 12:08 PM

 

Published : 01 Sep 2020 12:08 PM
Last Updated : 01 Sep 2020 12:08 PM

நேரடி பணப் பரிவர்த்தனையை தடுக்க பயணிகளிடம் மாதாந்திர பாஸ் திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும்: ஓட்டுனர், நடத்துனர்களுக்கு உத்தரவு

மதுரை

டிக்கெட் கட்டணத்துக்காக பயணிகளிடம் நேரடியாகப் பணம் பெறுவதைஹ் தவிர்க்க மாதாந்திர பாஸ் மற்றும் ஆன்லைனில் டிக்கெட் கட்டணம் செலுத்துவதை ஓட்டுனர், நடத்துனர்கள் ஊக்குவிக்க வேண்டும் என போக்குவரத்துறை முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கரோனா ஊரடங்கால் 5 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த பொதுப் போருந்து சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று முதல் மாவட்டங்களுக்குள் நகர் பேருந்து சேவை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கரோனா காலத்தில் நடைபெறும் பேருந்து சேவையின் போது ஓட்டுனர், நடத்துனர்கள், பயணிகள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அனைத்து அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்களுக்கும் தமிழக போக்குவரத்துறை முதன்மை செயலர் தர்மேந்திரபிரதாப்யாதவ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

மாவட்டங்களுக்குள் 50 சதவீத பஸ்களை மட்டுமே இயக்க வேண்டும். 60 சதவீத பயணிகளை மட்டுமே ஏற்ற வேண்டும். டிக்கெட் வழங்கும் போது நேரடி பணப் பரிவர்த்தனையை குறைக்க மாதாந்திர பாஸ் வாங்குவதற்கு பயணிகளை ஊக்கப்படுத்த வேண்டும்.

வாய்ப்புள்ள இடங்களில் செல்போனைப் பயன்படுத்தி கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்து டிக்கெட் கட்டணம் செலுத்த அனுமதிக்கலாம்.

மாதாந்திர பாஸ், ஆன்லைன் பணம் செலுத்தும் வசதி இல்லாதவர்களுக்கு கட்டணத்தை வசூலித்து டிக்கெட் வழங்கலாம். அனைத்து பஸ் நிலையங்கள், பொது இடங்கள், அரசு அலுவலகங்களில் மாதாந்திர பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பேருந்து நிலையங்கள், நிறுத்தங்களை தினமும் 2 முறை கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்த வேண்டும்.

பேருந்து பயன்பாடு:

ஒவ்வொரு பயணத்தின் போதும் பேருந்தை கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும், பேருந்துக்கள் ஏறும் போது பயணிகள் பயன்படுத்த இரு வாசலிலும் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும். பேருந்தில் ஏசி பயன்படுத்தக்கூடாது. பயணிகள் சமூக இடைவெளி விட்டு அமரும் வகையில் இடது பக்க இருக்கைகள் காலியாக வைத்திருக்க அடையாளமிட வேண்டும்.

ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பணியை தொடங்கும் முன்பு ஓட்டுனர், நடத்துனர்கள் உடல் வெப்ப நிலையை சோதிக்க வேண்டும். பணியின் போது ஓட்டுனர்கள், நடத்துனர்கள் கண்டிப்பாக முக கவசம், கையுறை அணிந்திருக்க வேண்டும். ஓட்டுனர், நடத்துனர்கள் அனைவரும் தனி பயன்பாட்டுக்காக கிருமி நாசினிபாட்டில் வைத்திருக்க வேண்டும். பயணிகள் முககவசம் அணியவும், பேருந்துக்குள் ஏறுவதற்கு முன்பு கிருமி நாசினி பயன்படுத்தவும் வலியுறுத்த வேண்டும். பேருந்து நிலையங்கள், நிறுத்தங்களில் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்ய தனி ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும்.

பயணிகளுக்கு அறிவுரை:

பயணிகள் வாய் மற்றும் மூக்கை முடும் வகையில் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும். பின்வாசல் வழியாக ஏறவும், முன்வாசல் வழியாக இறங்கவும் செய்ய வேண்டும், பேருந்தில் அனைத்து இருக்கைகளும் நிரம்பியிருந்தால் அடுத்த பேருந்துக்காக காத்திருக்க வேண்டும், காய்ச்சல், இருமல் இருப்பவர்கள் பேருந்தில் பயணம் செய்யக்கூடாது, பேருந்தில் பயணம் செய்யும் போதும், பேருந்து நிலையம், நிறுத்தங்களில் நிற்கும் போதும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x