Published : 31 Aug 2020 07:56 PM
Last Updated : 31 Aug 2020 07:56 PM

பிரணாப் முகர்ஜி மறைவு: முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தி:

“முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரும், மூத்த அரசியல் தலைவருமான பிராணாப் முகர்ஜி உடல் நலக்குறைவால் புதுடெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று (31.8.2020) காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

பிராணாப் முகர்ஜி, இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்து சிறப்பாக மக்கள் பணியாற்றியவர். இவர் நிதித்துறை, பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினராக மக்களவையிலும், மாநிலங்களவையிலும் திறம்பட செயலாற்றியவர்.

அம்மா ஆட்சியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் 150-வது ஆண்டு நிறைவு விழா, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை வைரவிழா, இந்திய திரைப்பட நூற்றாண்டு விழா உள்ளிட்ட பல விழாக்களில் அம்மாவுடன், தலைமை விருந்தினராக பிராணாப் முகர்ஜி கலந்து கொண்டு சிறப்பித்தவர்.

இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டவரான பிராணாப் முகர்ஜி சிறந்த பேச்சாளராகவும் விளங்கியவர். இவர் சிறந்த ஆட்சியாளராகவும், கடின உழைப்பாளியாகவும், அனைவரிடமும் அன்புடன் பழகும் தன்மையுடையவராகவும் இருந்தார். இந்திய அரசின் உயரிய பாரத ரத்னா மற்றும் பத்ம விபூஷன் விருதுகளை பெற்ற சிறப்புக்குரியவர்.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜியின் மறைவு இந்தியாவிற்கே ஒர் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி இரங்கலில் தெரிவித்துள்ளார்.


திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தி:


இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர், 'பாரத ரத்னா' பிரணாப் முகர்ஜி உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன். “மீண்டு வந்து விடுவார்”, “இயற்கைக்கு எதிரான போராட்டத்தில் வென்று காட்டுவார்" என்று என்று நாடே ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில் - இந்த வேதனை மிகுந்த மறைவுச் செய்தி என் அடிமனதை உலுக்கி எடுக்கிறது. அவரது மறைவிற்கு திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரணாப் முகர்ஜி அவர்கள் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 'மிராட்டி' என்ற ஒரு குக்கிராமத்தில் உள்ள மண் வீட்டிலிருந்து, 'குடியரசுத் தலைவர் மாளிகை' என்ற சிகரத்தைத் தனது திறமையாலும் கடினமான உழைப்பாலும் எட்டியவர். இளம் வயதிலேயே வீட்டில் காங்கிரஸ் கொடியேற்றியது - சீனப் போர்க் காலத்தில் ரத்த தான முகாம்கள் நடத்தியது.

சட்டக் கல்லூரி மாணவர் சங்கத்தின் தலைவராகச் செயல்பட்டது எனப் பொதுவாழ்வின் அழியாத சுவடுகள் நிறைந்த பொழிவு மிக்க அவரது பயணம் - 1960-களில் முதன்முதலில் தீவிர அரசியலுக்கு அவரைக் கொண்டு வந்து சேர்த்தது. அவர் காங்கிரஸ் பேரியக்கத்தில் ஒரு நூற்றாண்டு காலமாகத் தொடர்புடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்!

முதன்முறையாக மாநிலங்களவைக்குத் தேர்வு பெற்று – ஐந்து முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், இருமுறை மக்களவை உறுப்பினராகவும் இந்திய நாடாளுமன்றத்தை அலங்கரித்த மூத்த உறுப்பினர்களில் ஒருவர். திறமையான நாடாளுமன்ற விவாதத்திற்கும் - அற்புதமான உரைகளுக்கும் புகழ் பெற்றவர்.

வெளியுறவு, இராணுவம், வர்த்தகம், நிதி உள்ளிட்ட பல்வேறு மத்திய அமைச்சர் பதவிகளில் சிறப்பாகப் பணியாற்றி - அவரது காலக்கட்டத்தில் இருந்த பிரதமர்களுக்கு 'கண்ணும் செவியுமாக'ச் செயல்பட்டவர். மத்திய திட்டக் கமிஷனின் துணைத் தலைவராகப் பணியாற்றி தொலைநோக்குத் திட்டங்களைத் தீட்டிய தீர்க்கதரிசி.

'ஈடு இணையற்ற நிர்வாக ஆற்றலும்' 'எத்தகைய சிக்கல்களையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைக்கும் திறமையும்' படைத்த அவர், தேசியப் பிரச்சினைகளில் தெளிவான சிந்தனை கொண்டவர். ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கும் ஆற்றல் மிகுந்த - அசாத்திய துணிச்சலைத் தன்னகத்தே கொண்ட முதுபெரும் அரசியல் தலைவர். அவர் இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக - இந்த நாட்டின் முதல் குடிமகனாக இருந்து ஐந்து ஆண்டு நம்மையெல்லாம் வழி நடத்தியது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை.

திமுகவுடனும், கலைஞருடனும் நீண்ட நெடுங்காலமாகவே நெருங்கிய தொடர்பு கொண்ட அவர், கட்சியின் மாநில சுயாட்சிக் கருத்தரங்கில் பங்கேற்று மாநில உரிமைகளுக்கு மதிப்பளித்து உரையாற்றியவர். தமிழகத்தின் வளர்ச்சி மீது அக்கறை காட்டிய அவர், நிதியமைச்சராக இருந்தபோது கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி காலாவதியான நிலையிலும் - நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று - அந்த நிதியை ஒதுக்கி - சென்னை மக்களின் குடிநீர் தாகத்தைத் தீர்க்க மனப்பூர்வமாக ஒத்துழைத்தவர். அப்படிப்பட்ட தனது ஆரம்ப கால நண்பரான பிரணாப் முகர்ஜியை குடியரசுத் தலைவராக்க கலைஞர் முன்னணியில் நின்று ஆதரித்தார்.

“என் 50 ஆண்டுக்கால நண்பர் கலைஞர். நவீன இந்தியாவை உருவாக்கிய முக்கியத் தலைவர். இந்தியாவின் வளர்ச்சியிலும், தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும் மிகுந்த அக்கறை கொண்டவர்” என்று சமீபத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் 2-வது ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவீந்திரன் கூட்டிய காணொலிக் காட்சியில் பங்கேற்று பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரை இப்போதும் - எப்போதும் என் நினைவில் நிற்கும் பொன் வரிகள்.

தலைவர் கலைஞர் மறைந்தவுடன் வர இயலவில்லை என்பதால் - பிறகு கோபாலபுரம் இல்லத்திற்கு வந்த அவர், “நாடு சிறந்த மாபெரும் தலைவரை இழந்து விட்டது” என்று முத்தமிழறிஞர் கலைஞர் பற்றி அவர் சூட்டிய புகழாரம் திமுக வரலாற்றில் - சொக்கத் தங்கம் போல் ஜொலித்திடும் வரிகள்.

தேசிய அரசியலில் மாற்றுக் கட்சியினரும் தவிர்க்க முடியாத ஒரு மாபெரும் தலைவரை - ராஜதந்திரியை இந்தியா இழந்திருக்கிறது. அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களான மதச்சார்பின்மை - ஜனநாயகம் ஆகியவற்றின் அசைக்க முடியாத பாதுகாவலராக இறுதிவரை விளங்கிய நாடு போற்றும் தலைவரின் மறைவு - அந்தக் கொள்கைகளுக்காகப் போராடி வரும் திமுகவிற்கும் மற்ற அரசியல் கட்சிகளுக்கும் இந்த நேரத்தில் பேரிழப்பு.

அவர் எழுதி வெளியாகியுள்ள 'The Dramatic Decade' என்ற நூல் அரசியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு - கடந்தகால அரசியல் அனுபவங்களைத் தெரிந்து கொள்ள நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு மிகப் பொருத்தமான வழிகாட்டும் கையேடாகும். சாதுர்யம் மிக்க - அனுபவச் சக்ரவர்த்தி ஒருவரை இந்த நாடு இழந்திருக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் - காங்கிரஸ் பேரியக்கத்திற்கும், நாட்டு மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் - ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் இரங்கலில் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல்:

“காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவருமான பிரணாப் முகர்ஜி உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி இளம் வயதிலேயே இந்திரா காந்தியால் அடையாளம் காணப்பட்டு அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர். 34 வயதில் மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற பிரணாப் முகர்ஜி இந்திரா காந்தியின் நம்பிக்கைக்குரிய தளபதியாக திகழ்ந்தவர். இந்திராவுக்குப் பிறகு பிரதமராக வரும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டவர்.

மத்திய அமைச்சர், திட்டக்குழு துணைத் தலைவர் உள்ளிட்ட அனைத்துப் பதவிகளையும் வகித்த பிரணாப் முகர்ஜி, தமது அரசியல் பயணத்தின் உச்சமாக 2012-2017 காலத்தில் இந்தியாவின் குடியரசுத் தலைவர் பதவியையும் அலங்கரித்தவர்.

மத்திய அமைச்சரவையில் எந்த துறையின் அமைச்சராக இருந்தாலும் திறம்பட பணியாற்றியவர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் பாமக அங்கம் வகித்த போது எனக்கு நெருங்கிய நண்பராக திகழ்ந்தார். மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குதல், ஈழத்தமிழர் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களில் பிரணாபுடன் கடுமையான வாக்குவாதங்கள் நடந்தாலும் கூட, என்னுடைய கருத்துகளுக்கு மதிப்பு கொடுத்து கேட்டவர் . மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம் தீர்த்து வைத்து அரசைக் காத்தவர்.

பாதுகாப்பு அமைச்சராகவும், வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்த காலங்களில் இந்திய நலனில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாதவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல்:

“ 1935 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தின் பீர்பூம் மாவட்டத்தில் பிறந்த பிரணாப் முகர்ஜி ஒரு அரசியல் பாரம்பரியமுள்ள குடும்பத்தைச் சார்ந்தவர். அவரது தந்தை காங்கிரஸ் கட்சியின் சார்பில் மேற்குவங்கத்தில் மேலவை உறுப்பினராக 12 ஆண்டு காலம் பதவி வகித்தவர்.

அரசியலுக்கு வருவதற்கு முன்பு கல்கத்தாவில் சிலகாலம் அரசு ஊழியராகவும் அதன் பின்னர் உதவிப் பேராசிரியராகவும் பிரணாப் பணி புரிந்திருக்கிறார். 1969ஆம் ஆண்டு சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட கிருஷ்ணமேனனின் தேர்தல் பிரச்சாரத்தை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து அவர் நடத்தினார். அதைப் பார்த்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி காங்கிரஸ் கட்சியில் சேருமாறு அழைத்தார்.

1969-ம் ஆண்டில் முதன்முதலாக மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் நான்கு முறை அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்திருக்கிறார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் கூட்டணி கட்சிகளிடையே நல்லுறவு நிலவ அவரே முதன்மையான காரணமாக இருந்தார். அவர்மீது அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நன்மதிப்பு இருந்தது.

இந்திராகாந்தி அம்மையார் மரணம் அடைந்ததற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ராஷ்ட்ரிய சமாஜ்வாதி காங்கிரஸ் என்ற கட்சியைத் துவக்கினார். ஆனால் 1989-ம் ஆண்டு ராஜீவ் காந்தியுடன் ஏற்பட்ட நல்லிணக்கத்தின் காரணமாக அந்தக் கட்சியை காங்கிரசுடன் இணைத்து மீண்டும் காங்கிரஸில் ஐக்கியமானார்.

இந்தியாவின் நிதியமைச்சராக அவர் பொறுப்பு வகித்த காலம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 1982-84 மற்றும் 2009-2012 காலகட்டத்தில் நிதியமைச்சராக இருந்து அவர் அறிமுகப்படுத்திய சீர்திருத்தங்கள் அவரை உலகிலேயே சிறந்த நிதி அமைச்சர்களில் ஒருவராக அங்கீகாரம் பெற வைத்தன.

2012 முதல் 2017 வரை ஐந்து ஆண்டுகள் குடியரசுத் தலைவராக அவர் பொறுப்பு வகித்தார்.அப்போது எந்த ஒரு சர்ச்சைக்கும் ஆளாகாமல் எல்லோரிடத்திலும் நல்லுறவைப் பேணி வந்தார். 2020 ஆகஸ்ட் 8 ஆம் தேதி கலைஞரின் இரண்டாவது நினைவு நாளில் அஞ்சலி செலுத்தி உரையாற்றியபோது, மாநில உரிமைகள் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

“கரோனா பெருந்தொற்று ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடி மிகுந்த இந்த காலகட்டத்தில் மாநிலங்களுக்கு உரிய சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். அதுவே இந்த சிக்கலை எதிர் கொள்வதற்கு சரியான தீர்வாக இருக்கும்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

‘மற்றவர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே நலிந்த பிரிவினருக்கும் வாய்ப்புகள் சமமாக அளிக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்ட பிரணாப்முகர்ஜி, கூட்டாட்சி தத்துவமே இந்திய மக்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு சரியான பாதையாக இருக்கும் என்று அழுத்தமாகத் தெரிவித்தார். அதுவே அவர் ஆற்றிய கடைசி உரையாக அமைந்துவிட்டது.

மூளையில் இருந்த கட்டிகளை அகற்ற அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அத்துடன் கரோனா நோய்த்தொற்றும் ஏற்பட்டது. அதனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் காலமாகிவிட்டார்.

கண்ணியமான அரசியலுக்கு உதாரணமாகத் திகழ்ந்த பிரணாப் முகர்ஜிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறோம்”.
இவ்வாறு திருமாவளவன், இரங்கல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x