Last Updated : 31 Aug, 2020 07:48 PM

 

Published : 31 Aug 2020 07:48 PM
Last Updated : 31 Aug 2020 07:48 PM

திருச்சி மண்டலத்தில் தயார் நிலையில் 940 பேருந்துகள்

தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகள் சேவை நாளை மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், திருச்சி மண்டலத்தில் இயக்குவதற்காக 940 பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மார்ச் 22-ம் தேதி முதல்முதலாக சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, மார்ச் 21-ம் தேதி மாலையில் இருந்தே அரசு போக்குவரத்துக் கழகங்கள் தாங்கள் இயக்கும் பேருந்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கத் தொடங்கின.

இதன்தொடர்ச்சியாக வெளி மாவட்டங்களில் இருந்து மார்ச் 22-ம் தேதி அதிகாலை வரை திருச்சி வந்த அரசுப் பேருந்துகள் அனைத்தும் அந்தந்தப் பணிமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு நிறுத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து, மார்ச் 22-ம் தேதி சத்திரம் மற்றும் மத்தியப் பேருந்து நிலையங்கள் பேருந்து இல்லாமல் வெறிச்சோடின.

தொடர்ந்து, மார்ச் 23-ம் தேதி அரசு பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்ட நிலையில், மீண்டும் மார்ச் 24-ம் தேதி மாலை முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து, ஜூன் 1-ம் தேதி முதல் மண்டலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து தொடங்கியது. ஆனால், இந்த சேவைக்கும் ஜூன் 25-ம் தேதி மாலை முதல் தடை விதிக்கப்பட்டு, மாவட்டத்துக்குள் மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டன. பின்னர், ஜூலை 1-ம் தேதி முதல் பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், தொடர்ச்சியான 60 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு நாளை முதல் அரசுப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. திருச்சியிலும் தஞ்சாவூர் வழித்தடத்தில் தேவராயநேரி வரையிலும், சேலம் வழித்தடத்தில் மேய்க்கல்நாயக்கன்பட்டி வரையிலும், புதுக்கோட்டை வழித்தடத்தில் மாத்தூர் வரையிலும், கரூர் வழித்தடத்தில் பேட்டைவாய்த்தலை வரையிலும், மதுரை வழித்தடத்தில் துவரங்குறிச்சி வரையிலும், திண்டுக்கல் வழித்தடத்தில் பொன்னம்பலப்பட்டி வரையிலும் என மாவட்ட எல்லைகள் வரையில் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதையொட்டி, திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல், பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளை, பணியாளர்கள் சோதனை செய்து தயார்படுத்தி வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழகத் திருச்சி மண்டல மேலாளர் அலுவலக அலுவலர்கள் கூறும்போது, “அரசின் அறிவுறுத்தல்படி திருச்சி மண்டலத்தில் உள்ள 14 கிளைகளில் இருந்தும் இயக்குவதற்காக 940 பேருந்துகளைத் தயார் நிலையில் வைத்துள்ளோம். எத்தனை சதவீதம் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தவில்லை. இருப்பினும், பயணிகள் வருகைக்கேற்ப பேருந்துகளைத் தடையின்றி இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்துப் பேருந்துகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. வழிகாட்டு நடைமுறைகளை முறையாகப் பின்பற்ற ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளியூர்ப் பேருந்துகள் உட்பட அனைத்துப் பேருந்துகளும் மாவட்ட எல்லை வரை மட்டுமே இயக்கப்படவுள்ளன" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x