Published : 31 Aug 2020 02:06 PM
Last Updated : 31 Aug 2020 02:06 PM

வசந்தகுமார் புகைப்படத் திறப்பு விழா: அழைப்பு இல்லாததால் குஷ்பு அதிருப்தி

சென்னை

மறைந்த வசந்தகுமார் எம்.பி. புகைப்படத் திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்படாதது குறித்து குஷ்பு அதிருப்தி தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் ஆகஸ்ட் 28-ம் தேதி காலமானார். அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நேற்று (ஆகஸ்ட் 30) அவருடைய சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தமிழக காங்கிரஸ் கட்சியில் முக்கியமான நபர் என்பதால், அவருடைய புகைப்படம் திறக்கும் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (ஆகஸ்ட் 31) நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., தயாநிதி மாறன் எம்.பி., தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன் புகைப்படங்களும் வெளியிடப்பட்டன. இந்தப் புகைப்படங்களைக் குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"உயர்வான செயல். ஆனால், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுப் பிரிவில் யாருக்குமே இது பற்றிய தகவல் சொல்லப்படவில்லை. தமிழகத்தில் இருக்கும் ஒரே தேசிய செய்தித் தொடர்பாளர் நான்தான். ஆனால் நான் இந்தத் தகவலைச் செய்தித்தாள்கள் மூலமாகத் தெரிந்து கொள்கிறேன். நாம் நம் வலிமையை அதிகரிக்க வேண்டும். நமது பாதுகாப்பற்ற மனநிலை, அகந்தை (ஈகோ) காரணமாக பலவீனமாக்கக் கூடாது. எப்போது அதைச் செய்வோம்?".

இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து குஷ்பு வெளியிட்ட கருத்துகள் சமூக வலைதளத்தில் பெரும் விவாதத்தை உண்டாக்கியது. அதனைத் தொடர்ந்து பாஜகவில் சேரப் போகிறார் என்றும் தகவல் வெளியானது. இதற்கும் குஷ்பு மறுப்பு தெரிவித்திருந்தார்.

தற்போது குஷ்பு வெளியிட்டுள்ள இந்தக் கருத்துகள் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x