Published : 31 Aug 2020 07:42 AM
Last Updated : 31 Aug 2020 07:42 AM

சென்னைக் குடிநீருக்காக கண்டலேறு அணையிலிருந்து செப்டம்பர் 2-ம் வாரத்தில் கிருஷ்ணா நீர் திறப்பு: தெலுங்கு கங்கை திட்ட தொழில்நுட்ப வல்லுநர் குழு கூட்டத்தில் உறுதி

தெலுங்கு கங்கை திட்ட தொழில்நுட்ப வல்லுநர் குழு கூட்டம் நேற்று முன்தினம் திருப்பதியில் நடைபெற்றது.

திருவள்ளூர்

சென்னைக் குடிநீருக்காக கண்டலேறு அணையிலிருந்து செப்டம்பர்2-ம் வாரத்தில் கிருஷ்ணா நீர் திறக்கப்படும் என, தெலுங்கு-கங்கை திட்ட தொழில்நுட்ப வல்லுநர் குழு கூட்டத்தில் ஆந்திர அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி, ஆந்திர அரசு கண்டலேறு அணையிலிருந்து, 12 டிஎம்சி கிருஷ்ணா நீரை சென்னைக் குடிநீர் தேவைக்காக வழங்கவேண்டும். அதன்படி, முதல் தவணையாக ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், 2-வது தவணையாக ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும் தரவேண்டும்.

இந்நிலையில், கண்டலேறு அணையில் குறைந்த அளவு தண்ணீரே இருப்பில் இருந்ததால் நடப்பாண்டுக்கான முதல் தவணை கடந்த ஜூலை மாதமே தொடங்கியும், அணையிலிருந்து கிருஷ்ணா நீர் திறக்கப்படவில்லை.

தற்போது, தென்மேற்கு பருவமழையால், ஆந்திராவில் உள்ள சைலம் அணை நிரம்பி, கிருஷ்ணா நீர் சோமசீலா மற்றும் கண்டலேறு அணைகளுக்கு சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தெலுங்கு கங்கை திட்ட தொழில்நுட்ப வல்லுநர் குழு கூட்டம் நேற்று முன்தினம் திருப்பதியில் உள்ள தெலுங்கு கங்கை திட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழக பொதுப்பணித் துறையின் நீர் வள ஆதாரப் பிரிவின் முதன்மை தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஆந்திர அரசின் தெலுங்கு கங்கை திட்டதலைமைப் பொறியாளர் ஹரிநாராயண ரெட்டி, நீர்வள ஆதாரத்துறையின் (திட்டங்கள்) தலைமைப்பொறியாளர் முரளிநாத ரெட்டி, சென்னைக் குடிநீர் வாரியம் மற்றும்கழிவுநீர் அகற்று வாரிய தலைமைப் பொறியாளர் சமீலால் ஜான்சன், தமிழக நீர்வள ஆதாரப் பிரிவின் சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் அசோகன், பாலாறுவட்ட கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, கிருஷ்ணா குடிநீர் வழங்கும் திட்ட செயற்பொறியாளர் மரிய ஹென்றி ஜார்ஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், சென்னை பெருநகரின் குடிநீர் தேவைக்காக, நடப்பு ஆண்டுக்கான கிருஷ்ணா நீரை விரைவில் கண்டலேறு அணையிலிருந்து திறக்க வேண்டும் என, தமிழக அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர்.

அதை ஏற்ற ஆந்திர அதிகாரிகள், செப்டம்பர் 2-ம் வாரத்தில் சென்னைக் குடிநீருக்காக கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் திறக்கப்படும் என தெரிவித்தனர்.

மேலும், அவர்கள், தெலுங்கு கங்கை திட்ட பராமரிப்பு பணிக்காக தமிழக அரசு தரப்பில் தரவேண்டிய பாக்கித் தொகையான ரூ.362 கோடியை தருமாறு கோரிக்கை வைத்ததாகவும், அதை விரைவில்அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அதிகாரிகள் தெரிவித்ததாகவும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x