Published : 29 Aug 2020 05:55 PM
Last Updated : 29 Aug 2020 05:55 PM

ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை உட்பட அனைத்து நிதிகளையும் மத்திய அரசு தாமதமின்றி வழங்க வேண்டும்: முத்தரசன்

இரா.முத்தரசன்: கோப்புப்படம்

சென்னை

ஜிஎஸ்டி இழப்பீட்டு பாக்கித் தொகை உட்பட தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய அனைத்து நிதிகளையும் தாமதமின்றி வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (ஆக.29) வெளியிட்ட அறிக்கை:

"மத்திய பாஜக அரசு, வரி விதிப்பு முறைகளைச் சீரமைக்கிறோம் என்கிற பெயரில், ஜிஎஸ்டி என்கிற சரக்கு மற்றும் சேவை வரியை 2017 ஜூலை முதல் தேதியிலிருந்து அமலாக்கி வருகிறது.

இந்தப் புதிய வரிவிதிப்பு முறையால் பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. அப்போது ஜிஎஸ்டி வரிமுறையால், மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்புகளை ஈடுகட்ட 2017 முதல் 2022 வரையிலும் 5 ஆண்டு காலத்திற்கு இழப்பீடு தருவதாக மத்திய அரசு உறுதியளித்து, உடன்படிக்கை செய்துகொண்டது.

ஆனால், மத்திய அரசும், நிதித்துறையும் மாநிலங்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை மதிக்காமல் அத்துமீறி வருகிறது.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து, கரோனா நோய்த் தொற்றுப் பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக மாநிலங்களில் நிலவி வந்த நிதி நெருக்கடி மேலும் ஆழப்பட்டு, மீள வழியின்றி சிக்கித் தவிக்கின்றன.

கரோனா நோய் பேரிடர் காலத்தில் மாநிலங்களுக்கு உதவ வேண்டிய மத்திய அரசு தனது கடமைப் பொறுப்பைக் கை கழுவி விட்டது.

ஜிஎஸ்டி வரியால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் வகையில் மட்டும் தமிழ்நாட்டுக்கு ரூபாய் 12 ஆயிரத்து 258 கோடிக்கு மேல் மத்திய அரசு பாக்கி தர வேண்டும். இதுகுறித்து அண்மையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கேட்டபோது மத்திய நிதியமைச்சர், ரிசர்வ் வங்கியில் கடன் வாங்கிக் கொள்ளுங்கள் அல்லது பொதுக் கடன் சந்தையில் நிதி திரட்டிக் கொள்ளுங்கள் எனக் கூறி, தனது சட்டபூர்வ கடமைகளைச் சோப்புப் போட்டு கை கழுவிக் கொண்டார்.

கடுமையான நிதிச் சுமையால், கழுத்து முறிந்து, கடனில் மூழ்கிக் கிடக்கும் தமிழ்நாட்டை மேலும் கடன்காரனாக்கி, மீள முடியாத கொத்தடிமை ஆக்கும் மத்திய அரசின் வஞ்சகச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

ஜிஎஸ்டி இழப்பீட்டு பாக்கித் தொகை உட்பட தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய அனைத்து நிதிகளையும் தாமதமின்றி வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது".

இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x