Published : 28 Aug 2020 07:25 AM
Last Updated : 28 Aug 2020 07:25 AM

எடை குறைப்பு என்ற பெயரில் முகநூலில் மோசடி பெண்களின் புகைப்படம், வீடியோ பெற்று பணம் கேட்டு மிரட்டிய கும்பல்: சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை

உடல் எடையை குறைப்பதாக முகநூலில் ஆசைகாட்டி, பல இளம்பெண்களிடம் இருந்து புகைப்படங்கள், வீடியோக்களை பெற்று, பணம் கேட்டு மிரட்டிய மோசடி கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

உடல் எடை குறைப்பு மற்றும்அழகுக் குறிப்புகளை வழங்கும் முகநூல் பக்கம் ஒன்று, ‘அனிஷ் ஷா’ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. ஒரு பெண்ணின் புகைப்படத்தை முகப்பாக கொண்டு செயல்படும் இந்த பக்கத்தில், பெண்களுக்கு தேவையான அழகுக் குறிப்புகள் தொடர்ந்து பதிவிடப்பட்டு வருகின்றன. இதனால், கல்லூரி மாணவிகள், திருமணம் ஆனவர்கள் உட்பட ஏராளமான இளம்பெண்கள் இந்த முகநூல் பக்கத்தில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், ‘உடற்பயிற்சியே செய்யாமல் எடையை குறைக்க எளிய வழிகள்’ என்ற பெயரில் இந்த முகநூல் பக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு விளம்பரம் பதிவிடப்பட்டுள்ளது. வாட்ஸ்-அப் மூலமாக இப்பயிற்சி அளிக்கப்படும். கட்டணம் ரூ.1,000 முதல் ரூ.3,000 வரை என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் ஈர்க்கப்பட்ட பெண்கள் பலரும், அதில் கூறப்பட்டிருந்த வாட்ஸ்-அப் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பி, பயிற்சியில் சேருவதை உறுதிசெய்துள்ளனர்.

‘உடல் அமைப்பு குறித்து தெரிந்துகொள்வதற்காக, முதலில் முழு உருவ புகைப்படத்தை அனுப்புங்கள்’ என்று தொடக்கத்தில் அதில் தகவல் வர, பலரும் அனுப்பியுள்ளனர். பின்னர், முழு உருவ வீடியோவையும் அனுப்பியுள்ளனர். உடைகள் அணியாத நிலையிலும் சிலர் புகைப்படங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.

பலரிடம் இருந்தும் புகைப்படங்கள், வீடியோக்கள் வந்தநிலையில், அவற்றை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி பணம் கேட்டு மிரட்ட தொடங்கியுள்ளனர். சில பெண்கள் தைரியமாக, போலீஸில் புகார் தெரிவிப்பதாக கூறியதும், அந்த முகநூல் பக்கத்தில் இருந்த பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த வாட்ஸ்-அப் எண் தொடர்ந்து இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பலரும் புகார் கொடுத்துள்ளதால், சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x