Published : 27 Aug 2020 07:31 AM
Last Updated : 27 Aug 2020 07:31 AM

திருமுக்கூடல் அருகே லாரி மோதி பெண் உயிரிழப்பு; கல்குவாரிகளை தடை செய்யக் கோரி 3 மணி நேரம் மறியல்

உத்திரமேரூர்

திருமுக்கூடல் அருகே கல்குவாரி லாரி மோதியதில் பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கல்குவாரிகளை தடை செய்ய வலியுறுத்தி அந்தப் பகுதியில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உத்திரமேரூர் அருகே உள்ள திருமுக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. இவரது மனைவி மகேஸ்வரி(45). இப்பகுதியில் கல்குவாரி லாரிகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த 10 தினங்களுக்கு முன்புகூட ஒருவர் விபத்தில் இறந்துவிட்டார். இதனால் கல்குவாரி லாரிகள் இயக்கப்படவில்லை. பின்னர் போலீஸாரை ஆங்காங்கே பாதுகாப்புக்கு நிறுத்தி லாரிகள் இயக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பாண்டித்துரை, கல்குவாரி உரிமையாளர்களிடம் அதிகாரிகள், போலீஸார் பணம் வாங்கிக் கொண்டு பொதுமக்களுக்கு எதிராக நடப்பதாக தனது வீட்டுக்கு வெளியே வந்து கூச்சலிட்டுள்ளார். அப்போது அப்பகுதியில் பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸார் இவரை சாலவாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து பாண்டித்துரையை அழைத்து வர அவரது மனைவி மகேஸ்வரி காவல் நிலையம் சென்றுள்ளார். அங்கு பாண்டித்துரை தாக்கப்படுவதை பார்த்த மகேஸ்வரி வெளியில் வந்து கூச்சலிட்டுள்ளார். பின்னர், ‘அதிகாரிகளை இனி தவறாக பேச மாட்டேன்’ என்று எழுதி வாங்கிக் கொண்டு பாண்டித்துரையை போலீஸார் அனுப்பிவிட்டனர்.

பிறகு பாண்டித்துரை, மகேஸ்வரி இருவரும் இருசக்கர வாகனத்தில் சாலவாக்கத்தில் இருந்து திருமுக்கூடலில் உள்ள தங்கள் வீட்டுக்கு திரும்பியுள்ளனர். மதூர் கூட்டுச் சாலையை கடந்து திருமுக்கூடல் வந்தபோது கல்குவாரிக்கு வந்த லாரி இவர்கள் மீது மோதியது. இதில் மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே இறந்தார். லேசான காயங்களுடன் பாண்டித்துரை உயிர் தப்பினார்.

போலீஸார் பேச்சுவார்த்தை

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் குவிந்த கிராம மக்கள், ‘கல்குவாரிக்குச் செல்லும் லாரிகளால் தொடர்ந்து விபத்துகள் நடைபெறுவதாகவும், இந்த உயிரிழப்புக்கு போலீஸார் பொறுப்பேற்க வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து தங்கள் குறைகளை கேட்க வேண்டும்’ என்றும் கூறினர். பின்னர், அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் 3 மணி நேரம் நீடித்தது.

பின்னர் போலீஸார் பொதுமக்களிடம் சமாதானம் பேசினர். கோரிக்கை தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x