Last Updated : 26 Aug, 2020 04:15 PM

 

Published : 26 Aug 2020 04:15 PM
Last Updated : 26 Aug 2020 04:15 PM

காரைக்காலில் இந்த வார இறுதியில் கரோனா பரிசோதனை மையம் செயல்படத் தொடங்கும்: மாவட்ட ஆட்சியர் தகவல்

காரைக்காலில் இந்த வார இறுதியில் கரோனா பரிசோதனை மையம் செயல்படத் தொடங்கும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா கூறியுள்ளார்.

ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆக.26) செய்தியாளர்களிடம் ஆட்சியர் அர்ஜூன் சர்மா கூறியதாவது:

"காரைக்காலில் ட்ரூனட் (TrueNAT) முறையில் கரோனா பரிசோதனை செய்வதற்காக கருவி இன்று வருகிறது. இந்த வார இறுதியில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மையம் செயல்படத் தொடங்கும்.

ரேபிட் ஆன்டிஜன் கருவி மூலம் பரிசோதனை செய்யும் முறையும் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு ஆர்.டி.பி.சி.ஆர் முறையிலான பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது. இவற்றின் மூலம் காரைக்கால் மாவட்டத்தில் கரோனா பரிசோதனை முடிவுகளைத் தெரிந்து கொள்வதற்கு ஆகும் காலதாமதம் இனி குறையும்.

மாவட்டம் முழுவதிலும் குறிப்பாக காரைக்கால் நகரப் பகுதியில் அதிகமான அளவில் மூத்த குடிமக்களுக்கே கரோனா தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 50 வயதுக்கு மேற்பட்ட, ஏற்கெனவே ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரக பாதிப்பு, உடல் உறுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டோர் உள்ளிட்டோர் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். அவர்கள் தாமாகவே வீட்டுத் தனிமையில் இருப்பது நல்லது.

நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில், கடைகளில் மக்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருப்பதைக் காண முடிகிறது. பொது இடங்களிலும், தனியிடங்களிலும் மக்கள் கண்டிப்பாக தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும். அப்போதுதான் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.

கரோனா தடுப்பு முன் களப்பணியில் ஈடுபட்டுள்ளோர் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். காரைக்கால் அரசு பொது மருத்துவமனையிலிருந்து பரிந்துரைக்கப்படும் பட்சத்தில் கரோனா நோயாளிகளுக்குத் தேவையான இட வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு ஏற்கெனவே தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது".

இவ்வாறு அர்ஜூன் சர்மா கூறினார்.

நுழைவுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்குப் பேருந்து வசதி

செப்.1-ம் தேதி முதல் நடைபெறவுள்ள ஜேஇஇ., நீட் நுழைவுத் தேர்வுகளை காரைக்காலிலிருந்து புதுச்சேரி, கடலூர் மையங்களுக்குச் சென்று எழுதவுள்ள மாணவர்களுக்கு பல்வேறு தரப்பினரின் கோரிக்கையின் அடிப்படையில் சிறப்புப் பேருந்து போக்குவரத்து வசதி செய்யப்படவுள்ளது.

புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகம் மூலம் தேர்வு நடைபெறும் நாட்களில் அதிகாலை 3 மணி மற்றும் காலை 8 மணிக்கு காரைக்கால் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு தேர்வு மையங்களுக்குச் சென்று, தேர்வு முடிந்தவுடன் மாணவர்களைத் திரும்ப அழைத்துவரும் வகையில் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுடன் பெற்றோரும் செல்லலாம்.

பேருந்து மூலம் தேர்வு மையத்துக்குச் செல்ல விரும்பும் ஜேஇஇ தேர்வெழுதவுள்ள மாணவர்கள் நாளைக்குள் (ஆக.28), நீட் எழுதவுள்ள மாணவர்கள் செப்.8-ம் தேதிக்குள் 04368- 228801, 227704 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தங்கள் விவரங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x