Published : 26 Aug 2020 10:23 AM
Last Updated : 26 Aug 2020 10:23 AM

விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக அரசு சம்பா தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும்; ஜி.கே.வாசன்

விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக அரசு சம்பா தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஆக.26) வெளியிட்ட அறிக்கை:

"இயற்கையின் கருணையால் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிக மழை பெய்து மேட்டூர் நீர்மட்டம் குறிப்பிட்ட அளவில் உயர்ந்துள்ளது. டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு இதனால் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.

விவசாயிகள் அனைவரும் சம்பா சாகுபடிக்குத் தயாராகி வருகின்றனர். இந்த நடப்பாண்டில் காலதாமதம் இல்லாமல், நீண்ட கால ரகங்களைப் பயிரிட்டால் அவை வளர்ந்து நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவமழைக்குத் தாக்குப்பிடித்து செழுமையாக வளர்ந்து நிற்கும். அறுவடையின்போது ஆதாயம் தரும். ஆதலால் வேளாண்துறையினர் சாகுபடிக்குத் தேவையான வேளாண் இடுபொருள்களையும் விதைகளையும் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். அதோடு விவசாயிகளுக்குத் தேவையான பொருள்களை அரசு மானியம் விலையில் அளிக்க வேண்டும்.

சம்பா பயிர்கள் காலநேரத்தில் பயிரிடுவதால் அவை அறுவடை முடிந்தவுடன் நெல்லைவிட அதிக வருமானத்தை ஈட்டித்தரும். உளுந்து, பயறு, எள்ளு போன்றவற்றைப் பயிரிட முடியும். தற்பொழுது தமிழகத்தில் 10.5 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி செய்ய வாய்ப்பு கனிந்துள்ளது. ஆகவே, உடனடியாக சம்பா சாகுபடிக்கு விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக அரசு சம்பா தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும். இந்த அறிவிப்பால் பல லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுவர். விவசாயம் செழிக்கும்".

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x