Published : 25 Aug 2020 01:48 PM
Last Updated : 25 Aug 2020 01:48 PM

திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து: சட்டப்பேரவை வரலாற்றில் ஜனநாயகம் போற்றுகின்ற தீர்ப்பு; ஸ்டாலின் வரவேற்பு

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்றதற்காக உரிமைக் குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில், நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஆக.25) தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

"திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்து, சட்டப்பேரவை ஜனநாயகத்தை சென்னை உயர் நீதிமன்றம் காப்பாற்றி இருக்கிறது.

சட்டப்பேரவை உறுப்பினர்களின் கருத்துச் சுதந்திரத்தையும், மக்களை வெகுவாகப் பாதிக்கும் பிரச்சினைகளையும் சட்டப்பேரவையில் எழுப்பும் உரிமையையும் பேரவைத் தலைவர் காப்பாற்றத் தவறிவிட்டாலும், சென்னை உயர் நீதிமன்றம் அந்த உரிமையை சட்டபூர்வமாகப் பாதுகாத்து இருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது.

புற்றுநோயை உருவாக்கும் குட்கா விற்பனையைத் தாராளமாக அனுமதித்து அதில் பங்கேற்ற அதிமுக அரசின் குட்கா ஊழலை நாட்டு மக்களுக்குத் தெரிவித்திடவே குட்கா பாக்கெட்டுகளை எடுத்துச் சென்றதை மறைத்து, நீதி வழுவிய முறையில் பேரவைத் தலைவர் மூலமாக திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பி சதிச் செயலில் இறங்கியது அதிமுக அரசு.

அதை இந்தத் தீர்ப்பு தகர்த்தெறிந்து இருக்கிறது. சட்டப்பேரவை வரலாற்றில் ஜனநாயகம் போற்றுகின்ற தீர்ப்பை, திமுகவின் சார்பில் மனதார வரவேற்று மகிழ்கிறேன்!

இந்த வழக்கில் திமுகவின் சார்பில் வாதாடி, சிறப்பான இந்தத் தீர்ப்பு வருவதற்கு காரணமாக இருந்த திமுகவின் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் மற்றும் என்.ஆர்.இளங்கோ எம்.பி., ஆகியோருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குட்கா வியாபாரிகளிடம் மாமூல் வாங்கிய அமைச்சர் மீது தமிழக முதல்வர் பழனிசாமி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும், இன்னும் குட்கா விற்பனை தங்கு தடையின்றி நடந்து கொண்டிருக்கிறது என்பதும் கசப்பான உண்மை மட்டுமல்லாமல்; தமிழகத்திற்கும் தலைக்குனிவு ஆகும்.

தடை செய்யப்பட்ட போதைப்பொருள் தாராளமாக விற்கப்படுகிறது என்பதை அம்பலப்படுத்திய எதிர்க்கட்சியின் மீது உரிமை மீறல் விதியை பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பதற்குப் பாய்ந்த அரசு, குட்கா விற்பனையைக் கட்டுப்படுத்துவதில் பதுங்கிவிட்டது. அதனால் குட்கா எனும் சமூகத் தீமையின் போக்குவரத்தும் விற்பனையும் கொடிகட்டிப் பறக்கிறது".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x