Published : 24 Aug 2020 08:38 AM
Last Updated : 24 Aug 2020 08:38 AM

தாம்பரம் அருகே வரதராஜபுரத்தில் அடையாறு ஆற்றில் மழைநீர் கடலில் கலப்பதை தடுக்க ரூ.17 கோடியில் வெள்ளத் தடுப்பணை: 85 மில்லியன் கன அடி நீர் சேமிக்க வாய்ப்பு

கடந்த காலத்தில் பெய்த பெருமழையால் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு காரணமான அடையாறு ஆற்றின் குறுக்கே, ரூ.17 கோடி செலவில் தாம்பரம் அடுத்த வரதராஜபுரத்தில் வெள்ள தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. படம்: எம்.முத்துகணேஷ்

தாம்பரம்

மழைநீரை சேமிக்கும் வகையில், அடையாறு மற்றும் அவற்றின் கிளை ஆறுகளில் ரூ.17 கோடி மதிப்பில் கதவணையுடன் கூடிய வெள்ளத் தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், 85 மில்லியன் கன அடி நீர் சேமிக்க வழி ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு மிக முக்கிய காரணமான நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி குடிமராமத்து, ஆறுகளில் தடுப்பணை, கிளை ஆறுகளில் கதவணையுடன் கூடிய தடுப்
பணை, நீர்நிலைகளில் ஆக்கிர மிப்புகளை அகற்றுவது, கிராம மற்றும் கோயில் குளங்களைப் பராமரிப்பது போன்ற பணிகளை
தமிழக அரசு பொதுப்பணித் துறை மூலம் மேற்கொண்டு வருகிறது. இதன் பலனாக காஞ்சி, செங்கை மாவட்டங்களில் 80 சதவீத நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.

இந்த வகையில் அடையாறு ஆற்றில் இருந்து வெளியேறும் நீரை சேமிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே உள்ள, ஆதனுாரில் தொடங்கும் அடையாறு ஆற்றில், ஆதனூர் முதல் திருநீர்மலை வரை உள்ள 15 கி.மீக்கு சுமார் 37 ஏரிகளின் உபரிநீர் கலந்து கடலுக்கு வீணாக செல்கிறது. இதைத் தடுத்து சேமிக்க ஆங்காங்கே தடுப்பணைகளை அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை அடுத்து, பொதுப்பணித் துறையினர் ஆய்வுசெய்து ஒரத்தூர், வரதராஜபுரம், சோமங்கலம், திருநீர்மலை ஆகிய பகுதிகளில் தடுப்பணைகள் கட்டமுடிவு செய்தனர். முதற்கட்டமாக
ஒரத்தூர், ஆரம்பாக்கம் ஆகிய ஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அடுத்து முடிச்சூர், வரதராஜபுரம் தாங்கல் ஏரிகள் மற்றும் அடையாறு ஆறு ஆகியவற்றை இணைத்து கதவணையுடன் கூடிய நீர்த்தேக்கம் ஒன்றை கட்டும் பணி ரூ.11 கோடியில் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் மணிமங்கலம், நந்திவரம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, ஆதனூர், ஒரத்தூர், வரதராஜபுரம், முடிச்சூர் போன்ற ஏரிகளில் இருந்து வெளியேறும் சுமார் 50 மில்லியன் கன அடி உபரிநீர் வீணாக கடலில் கலக்காமல் தேக்கி வைக்க முடியும்.

35 மில்லியன் கனஅடி நீர்

இதேபோல் சோமங்கலம், மலைப்பட்டு, மணிமங்கலம், சேத்துப்பட்டு போன்ற ஏரிகளின் உபரிநீர் அடையாற்றில் வீணாகாமல் தடுக்க, சோமங்கலம் பகுதியில் அடையாறு கிளை ஆற்றில் ரூ. 35 மில்லியன் கனஅடி நீரை 4.5 கோடி செலவில் மேம்பாலம்
மற்றும் கதவணையுடன் கூடிய வெள்ளத் தடுப்பணை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதன் மூலம் சுமார் 35 மில்லி
யன் கன அடி நீரை சேமிக்க முடியும். மேலும் திருநீர்மலை அருகே அடையாறு ஆற்றில் 2 அடி உயரத்தில் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் மற்றொரு தடுப்பணையும் கட்டப்பட உள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் தே.குஜராஜ் கூறியது: நிலத்தடி நீரைச் சேமிக்க போர்க்கால அடிப்படையில் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மழைக் காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் உபரிநீரை நீர்த் தேக்கங்கள் மூலம் சேமித்து முறையாகப் பயன்படுத்த வேண்டும். இதற்காக தமிழக அரசு பல கோடியில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இதுபோன்ற திட்டங்களால் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும் விவசாயத்துக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கப் பெறும். எதிர்காலத்தில் குடிநீர் தேவைக்கும் சேமிக்கப்படும் நீரை பயன்படுத்த முடியும். இந்த பணிகளை மேற்கொள்ள ஆக்கிரமிப்புகள் இடையூறாக உள்ளன. காஞ்சி, செங்கை மாவட்ட நிர்வாகங்கள் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை
மேற்கொண்டு வருகின்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x