Published : 22 Aug 2020 04:21 PM
Last Updated : 22 Aug 2020 04:21 PM

அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களின் கட்டாயக் கட்டண வசூல்: முதல்வர் ரத்து செய்து ஆணையிட வைகோ கோரிக்கை

சென்னை

கல்விக் கட்டணம் செலுத்தத் தாமதமானால் எந்தவிதமான அபராதத் தொகையையும் வசூலிக்கக் கூடாது என, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் தமிழக அரசு உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என முதல்வருக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:

“கரோனா பேரிடரால், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வேலை இழந்து பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பெரும்பான்மையான மக்கள் வீதிக்கு வருகின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இருக்கிற உயர்கல்வி நிறுவனங்கள் நடப்பு ஆண்டிற்கான கல்விக் கட்டணத்தை உடனடியாகவும், மொத்தமாகவும் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகம், ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டுள்ள மாணவர்கள் செமஸ்டர் கட்டணத்தை உடனடியாகச் செலுத்த வேண்டும். இல்லையேல், இந்த மாதம் 26 ஆம் தேதிக்குள் அபராதத்துடன் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளதோடு, கட்டணம் செலுத்தாவிட்டால் ஆராய்ச்சி மாணவர்களின் (Ph.D.,) பதிவு ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.

என்.ஆர்.ஐ, சி.ஐ.டபிள்யூ.ஜி.சி (NRI, CIWGC) ஒதுக்கீட்டின் கீழ், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சி.இ.ஜி, எம்.ஐ.டி போன்ற கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் வெளிநாடுவாழ் தமிழக மாணவர்கள், நடப்பு ஆண்டிற்கான ( 2020 - 2021) கல்விக் கட்டணத்தை வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் கட்ட வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர் விவகாரங்களுக்கான மையம், நடப்பு கல்வி ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தையோ, கடந்த கல்வி ஆண்டுக்கான (2019 - 2020) பாக்கி கட்டணத் தொகையையோ செலுத்த மாணவர்களையும், பெற்றோர்களையும் கட்டாயப்படுத்தக் கூடாது. கட்டணம் செலுத்தத் தாமதமானால் அபராதத் தொகை வசூலிப்பது சட்டவிரோதம் ஆகும். மேற்கண்ட உத்தரவை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

கோவிட் - 19 நுண்ணுயிர் தொற்று பாதிப்பைக் கருத்தில் கொண்டு, உலக நாடுகள் கல்விக் கட்டணத்தை குறைப்பது தொடர்பாக பரிசீலித்து வருகின்ற நிலையில், தமிழகத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் கட்டாயக் கட்டண வசூலிப்பில் ஈடுபட்டு வருவது கண்டனத்துக்கு உரியதும், மனிதாபிமானம் அற்ற செயலுமாகும்.

பெரும்பாலான பெற்றோர்கள், கூலி வேலை செய்தும், குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறும் பணிகளில் ஈடுபட்டும்தான் தங்களது பிள்ளைகளுக்குக் கல்விக் கட்டணத்தை செலுத்தி வருகின்றார்கள். தங்களது வாழ்வாதாரமே கேள்விக்குள்ளாகி இருக்கிற நிலையில், பெற்றோர்களையோ, மாணவர்களையோ மொத்தமாக கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என நிர்பந்திக்கக் கூடாது.

பெற்றோர்களும், மாணவர்களும், கல்வியாளர்களும், அரசியல் இயக்கங்களும், சமூக ஆர்வலர்களும், கல்விக் கட்டணக் குறைப்பை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் குறைந்தபட்சம் தவணை முறையிலாவது கட்டணத்தைச் செலுத்த அனுமதிக்க வேண்டும்.

கல்விக் கட்டணம் செலுத்தத் தாமதமானால் எந்தவிதமான அபராதத் தொகையையும் வசூலிக்கக் கூடாது என, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் தமிழக அரசு உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என முதல்வரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு வைகோ வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x