Published : 22 Aug 2020 08:17 AM
Last Updated : 22 Aug 2020 08:17 AM

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வுக்கேற்ப கட்டிட மதிப்பு நிர்ணயம்: அரசு முதன்மை பொறியாளர் தகவல்

கட்டுமான பொருட்களின் அரசு விலை 7.30 சதவீதம் உயர்த்தப்பட்டு, அதன் அடிப்படையிலேயே கட்டிட மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை முதன்மை தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பொதுப்பணித் துறை கட்டிடப் பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜமோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2020-21 ஆண்டுக்கான தளப்பரப்பு விலை விகித அட்டவணை கடந்த 16-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கட்டுமானம் சார்ந்த பொருட்களுக்கான விலை விகிதம் 7.30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

பொருட்களின் சந்தை விலை உட்பட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு, கட்டிடத்துக்கான மதிப்பீட்டை இதற்காக நிர்ணயிக்கப்பட்ட குழு, பொதுப்பணித் துறை வாயிலாக வெளியிடுகிறது.

அதன்படி, சுமைதாங்கி கட்டமைப்பு கட்டிடங்கள், வலுவூட்டப்பட்ட கற்காரை கட்டமைப்பு, கிடங்கு, கூரை, ஓடு, வண்டிக்கொட்டில் உள்ளிட்ட கட்டிடங்கள், குடிநீர், கழிவுநீர் இணைப்புகள் என அனைத்துக்கும் ஏற்கெனவே இருந்த விலை மதிப்பில் இருந்து 7.30 சதவீதம் வரை மதிப்பை உயர்த்தி நிர்ணயித்துள்ளது.

அதேநேரம், போக்குவரத்து செலவு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சிக்கு அதைவிட 20 சதவீதம் கூடுதலாக 8.76 சதவீதமும், கோவை, ஈரோடு, திருப்பூர் மாநகராட்சிகளுக்கு 15 சதவீதம் கூடுதலாக 8.40 சதவீதமும், திருச்சி, மதுரை, சேலம், நெல்லை, தூத்துக்குடி, வேலூர், தஞ்சை, திண்டுக்கல் மாநகராட்சிகளில் 10 சதவீதம் கூடுதலாக 8.03 சதவீதமும் உயர்த்தி மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

உயர்த்தப்பட்ட சதவீதம் குறைவாக இருந்தாலும், பத்திரப் பதிவின்போது பதிவுக் கட்டணம், முத்திரைக் கட்டணம் உயரும். உதாரணமாக, கடந்த ஆண்டு சென்னையில் ரூ.1 கோடியாக இருந்த ஒரு வீட்டின் மதிப்பு, இந்த ஆண்டு ரூ.1 கோடியே 8 லட்சத்து 76 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்த வீட்டை வாங்குபவர் இந்த 8 லட்சத்து 76 ஆயிரத்துக்கு கூடுதலாக முத்திரைத் தாள், பதிவுக் கட்டணமாக 11 சதவீதம், அதாவது ரூ.96,360 கூடுதலாக செலுத்தவேண்டி வரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x