Published : 22 Aug 2020 07:20 AM
Last Updated : 22 Aug 2020 07:20 AM

தவில் வித்வான் அடையாறு சிலம்பரசனுக்கு உலக சாதனையாளர் விருது

108 தாளங்களை ஆவணப்படுத்தியுள்ள தவில் வித்வான் அடையாறு ஜி.சிலம்பரசனுக்கு உலக சாதனையாளர் விருதை வீணை இ.காயத்ரி வழங்கினார். உடன் ‘இந்தியன் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்’ அமைப்பின் நிறுவனர் செந்திலரசு.

சென்னை

கர்னாடக இசையின் அங்கமான 108 தாளங்களையும் எப்படி கையாளவேண்டும் என்பதை காணொலியில் ஆவணப்படுத்தியதற்காக தவில் வித்வான் அடையாறு ஜி.சிலம்பரசனுக்கு ‘இந்தியன் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்’ சார்பில் உலக சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் ஜி.சிலம்பரசன் கூறியதாவது:

தாளங்களின் பெயர்கள், அதன் அங்கங்கள், விளக்கங்களை ஒழுங்குபடுத்தி பதிவு செய்ய வேண்டும் என்பது என் நீண்டகால விருப்பம். இதற்காக 10ஆண்டுகளாக பல இசை மேதைகளை சந்தித்தும், நூல்கள் மூலமாகவும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவந்தேன். அதைத் தொடர்ந்து, 108 தாளங்களை நிர்வகிக்கும் ஒழுங்குமுறையை ஆவணப்படுத்த முயன்றேன்.

தற்போது கரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடியே ஒரு நாளுக்கு ஒரு தாளம் என 108 நாட்களுக்கு 108 தாளத்தில் மோரா,கோர்வை, அறுதி தயாரித்து, தாளமிட்டு சொல்லி யூ-டியூப்பில் என்பெயரில் (Adyar G Silambarasan) பதிவு செய்துள்ளேன்.

குறைந்த அட்சரத் தாளங்கள் முதல் 128 அட்சரங்கள் கொண்டசிம்ம நந்தன தாளம் வரை இப்பதிவில் உள்ளன. இதை பார்க்கும்போது, 108 தாளங்களையும் எப்படி கையாள வேண்டும் என்பதை தெளிவாக புரிந்துகொள்ளலாம்.

108 தாளத்துக்கும் அதன் அங்கங்களை நிர்ணயித்து முதல்முறையாக நான் ஆவணப்படுத்தி உள்ளதால் உலக சாதனையாளர் விருது கிடைத்துள்ளது. விருது வழங்கிய ‘இந்தியன் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்’ அமைப்புக்கு நன்றி. எனது குருவான தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி விரிவுரையாளர் திருக்கண்ணபுரம் எஸ்.ஜெயச்சந்திரனின் ஆசிர்வாதமே இந்த பணிக்கு காரணம். இசை மேதை வீணை காயத்ரியின் கைகளால் விருது வாங்கியது என் பேறு.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x