Last Updated : 20 Aug, 2020 06:06 PM

 

Published : 20 Aug 2020 06:06 PM
Last Updated : 20 Aug 2020 06:06 PM

தூய்மை நகரங்கள் பட்டியல் வெளியீடு: தமிழ்நாடு அளவில் 5-வது ஆண்டாக திருச்சி மாநகராட்சி முதலிடம்

பிரதிநிதித்துவப் படம்

திருச்சி

நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலில், தமிழ்நாடு அளவில் திருச்சி மாநகராட்சி 5-வது ஆண்டாக முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.

மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் சார்பில் 2016 ஆம் ஆண்டு முதல் தூய்மை நகரங்கள் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது.

தூய்மை நகர ஆய்வுக் குழுவின் நேரடி கள ஆய்வு, நகர மக்களின் மதிப்பீடு, ஆவணப்படுத்துதல், சான்றளிப்பு ஆகிய அம்சங்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, அதிக மதிப்பெண்கள் பெறும் நகரங்கள் வாரியாக தூய்மை நகரங்கள் வரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. அந்தவகையில், தூய்மை நகரங்கள் வரிசைப் பட்டியல் இன்று (ஆக.20) வெளியிடப்பட்டது. இதில், தேசிய அளவில் திருச்சி மாநகராட்சி 102-வது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தத் திட்டம் தொடங்கிய 2016-ம் ஆண்டில் தேசிய அளவில் திருச்சி மாநகராட்சி 3-வது இடத்தைப் பிடித்தது. இதையடுத்து, 2017-ல் முதலிடம் பிடிக்கும் நோக்கில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியது. ஆனால், 2017-ல் 6-வது இடத்தையும், 2018-ல் 13-வது இடத்தையும், கடந்தாண்டில் 39-வது இடத்தையுமே பிடித்த நிலையில், நிகழாண்டில் எவருமே எதிர்பாராத வகையில் 102-வது இடத்தையே திருச்சி மாநகராட்சி பெற்றுள்ளது.

தேசிய அளவில் ஆண்டுதோறும் பின்னோக்கிச் செல்வது திருச்சி மாநகர மக்களுக்கும், மாநகராட்சி அலுவலர்களுக்கும் ஒருபுறம் ஏமாற்றத்தைத் தந்தாலும், தூய்மை நகரங்கள் பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்ட 2016-ம் ஆண்டு முதல் நிகழாண்டு வரை தமிழ்நாடு அளவில் தொடர்ந்து முதலிடத்தை திருச்சி மாநகராட்சி தக்கவைத்து வருவது மறுபுறம் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தந்துள்ளது.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறும்போது, "தூய்மை நகரங்கள் பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்ட 2016-ம் ஆண்டில் தேசிய அளவில் 3-வது இடத்தைப் பிடித்த திருச்சி மாநகராட்சி, அதன்பிறகு பின்னோக்கியே செல்கிறது. இருப்பினும், தமிழ்நாடு அளவில் முதலிடத்தைத் தொடர்ந்து தக்கவைத்து வருவது ஆறுதலாக உள்ளது. எனவே, அடுத்தாண்டில் சிறப்பிடம் பிடிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும்" என்றனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன், 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறுகையில், "திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட மக்களுக்கான சுகாதாரத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் சிறப்பாகவே மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும், தூய்மை நகரங்கள் பட்டியலில் பின்னோக்கிச் சென்றது தொடர்பாக ஆய்வு செய்யப்படும். மேலும், அடுத்தாண்டில் சிறப்பிடம் பிடிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x