Published : 19 Aug 2020 12:27 PM
Last Updated : 19 Aug 2020 12:27 PM

தந்தை இறந்த நிலையிலும் சுதந்திர தின கடமையை நிறைவேற்றிய காவல் ஆய்வாளர் மகேஸ்வரி; ஸ்டாலின் பாராட்டு

தந்தை இறந்த செய்தியறிந்தும் சுதந்திர தின விழாவில் காவல்துறை அணிவகுப்பை சிறப்பாக நடத்திய காவல் ஆய்வாளர் மகேஸ்வரிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், நெல்லை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆகஸ்ட் 15 அன்று நடைபெற்ற சுதந்திர தின கொடியேற்று விழாவின்போது, தமது தந்தை இறந்துவிட்டார் என்ற வேதனை மிகுந்த செய்தியை அறிந்த பிறகும் கலந்துகொண்டு தமது கடமையை நிறைவேற்றிய காவல்துறை ஆய்வாளர் மகேஸ்வரியைப் பாராட்டி நேற்று (ஆக.18) கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளதாவது:

"கடமை உணர்வின் அடையாளமாகத் திகழும் காவல்துறை ஆய்வாளர் மகேஸ்வரிக்கு, வணக்கமும் வாழ்த்துகளும்!

கம்பீரமான காக்கி உடுப்பை அணிந்த பிறகு வீட்டுச் சூழ்நிலை எப்படி இருந்தாலும், நாட்டு நிலையும் பொதுமக்களின் பாதுகாப்புமே முதன்மையானது என்பதை உணர்ந்து செயலாற்றுபவர்களே சிறப்பான காவல் அதிகாரிகளாகத் திகழ்கிறார்கள்.

தமிழக காவல்துறை எத்தனையோ சிறப்பான காவல் அதிகாரிகளைத் தந்த மாநிலமாக; இந்தியாவுக்கு முன்னோடியாகத் திகழ்ந்துள்ளது.

அந்த வகையில், தங்களின் தந்தை நாராயணசாமி இறந்துவிட்டார் என்ற வேதனை மிகுந்த செய்தியை அறிந்த பிறகும், ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின நாளில் நிறைவேற்ற வேண்டிய கடமையை நிறைவேற்றும் வகையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கொடியேற்று விழாவில், காவல்துறையின் அணிவகுப்பை சிறப்பாக நடத்தி, வாள் சுழற்றி 'சல்யூட்' வைத்து, கடமையுணர்ச்சியின் சிகரமாகத் திகழ்ந்ததை தமிழகமே போற்றுகிறது.

பாசத்தைவிட கடமையே முக்கியம் என்பதை காவல்துறையில் தங்களின் கீழ் பணியாற்றும் மற்றவர்களுக்கும், இனி இந்தப் பணியில் சேர ஆர்வமாக உள்ள தலைமுறையினருக்கும் உணர்த்தியிருக்கிறீர்கள்.

காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு சிறப்பு துணை ஆய்வாளராக உள்ள தங்கள் கணவரும் குழந்தைகளும் தங்களின் கடமைக்குத் துணை நின்றதை அறிந்த போது மேலும் மதிப்பு கூடியது.

வேதனையை விழுங்கிக் கொண்டு, தேசத்தின் பெருமைக்குரிய தினத்தின் சிறப்பைப் போற்றும் வகையில் செயலாற்றிய தங்களுக்கு வணக்கமும் வாழ்த்துகளும் தெரிவித்துத், தந்தையாரை இழந்து வாடும் தங்களின் துயரில் பங்கேற்கிறேன்.

காக்கிச் சீருடைக்குரிய கம்பீரமான பணிகள் தொடரட்டும்!"

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x