Published : 19 Aug 2020 08:06 AM
Last Updated : 19 Aug 2020 08:06 AM

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் விவகாரம்: திண்டுக்கல்லிலும் அதிமுகவினர் சர்ச்சை போஸ்டர்

அதிமுகவில் திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளராக அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசனை நியமனம் செய்த கட்சித் தலைமைக்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் தமிழக முதல்வர் ஓ.பி.எஸ். என்றும் துணை முதல்வர் இ.பி.எஸ். என்றும் அச்சிடப்பட்டுள்ளது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்ட அதிமுகவை இரண்டாகப் பிரித்து கிழக்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர். விஸ்வநாதன், மேற்கு மாவட்டச் செயலாளராக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆகியோரை கட்சித்தலைமை அண்மையில் நியமனம் செய்தது.

இதில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளாராக அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசனை நியமித்ததற்கு கட்சித் தலைமைக்கு நன்றி தெரிவித்து, அதிமுகவினர் சிலர் திண்டுக்கல் நகர் பகுதியில் பல இடங்களில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

முதல்வர், துணை முதல்வர்

அதில் ‘கழக இணை ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பி.எஸ்., கழக ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் இ.பி.எஸ்., திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக திண்டுக்கல் சி.சீனிவாசன், கழக அமைப்புச்செயலாளர், வனத்துறை அமைச்சர் நியமனம் செய்தமைக்கு நன்றி, நன்றி,’ என அச்சிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை பார்த்த அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

அதிமுகவில் தற்போது அடுத்த முதல்வர் யார் என்ற விவகாரம், பரபரப்பாக திரைமறைவில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த போஸ்டர்கள் உள்நோக்கத்தோடு அச்சிடப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் முதல்வர் கே. பழனிசாமியின் ஆதரவாளராக இருந்த அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், அணி மாறி ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராகி விட்டாரா என அதிமுக வட்டாரங்களில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x