Published : 18 Aug 2020 08:06 AM
Last Updated : 18 Aug 2020 08:06 AM

கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு அமைச்சர் வேலுமணி விருது

ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கரோனா தடுப்பில் சிறப்பாக சேவையாற்றிய பணியாளர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சென்னையில் நேற்று விருதுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:

உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் கரோனா வைரஸ் தொற்றை கண்டறிதல், காய்ச்சல் முகாம்கள் நடத்துதல், பல்வேறு விளம்பரப் பணிகள் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மூலம் தமிழகத்தின் பிற பகுதிகளில் முற்றிலும் கரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கையில் வட்டார அளவில் 431 பொறுப்பு அலுவலர்களும், கிராம ஊராட்சி அளவில் 12 ஆயிரத்து 525 பொறுப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட இல்லங்களில் உள்ள நோய் கண்டறியப்பட்டவர்கள் ஊராட்சி பணியாளர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். ஊரகப் பகுதிகளை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிப்பதில் தமிழக அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் 50 லட்சத்துக்கும் மேலான தனிநபர் இல்ல கழிப்பறை கட்டப்பட்டதன் மூலம் தமிழகம் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற மாநிலமாக உருவாகியுள்ளது. தன்னலமின்றி நாட்டு நலனுக்காக அயராது செயல்பட்டுவரும் தூய்மை காவலர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பதில் பெருமிதம் அடைகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை செயலர் ஹன்ஸ் ராஜ் வர்மா, ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் கே.எஸ்.பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x