Published : 16 Aug 2020 07:45 AM
Last Updated : 16 Aug 2020 07:45 AM

சென்னையில் மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

தெற்கு ரயில்வே சார்பில் சென்னை அயனாவரத்தில் உள்ள ஆர்பிஎப் மைதானத்தில் சுதந்திர தின விழா நிகழ்வுகள் நேற்று நடைபெற்றன. இதில், பங்கேற்ற தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ், முதுநிலை துணை பொதுமேலாளர் பூமா, தலைமை ஊழியர்கள் நல அதிகாரி நாராயணன் உள்ளிட்டோர் பலூன்களை பறக்க விட்டனர்.

சென்னை

நாட்டின் 74-வது சுதந்திர தினம் சென்னையில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் நேற்று கொண்டாடப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஏ.பி.ஷாஹி தேசிய கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இதில், தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமைச் செயலர் கே. சண்முகம், அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், டிஜிபி திரிபாதி, மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் மற்றும் வழக்கறிஞர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில், துறைமுகத் தலைவர் பி.ரவீந்திரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் நடந்த விழாவில், ஐஓசி செயல் இயக்குநர் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) பி.ஜெயதேவன் முன்னிலையில், அந்நிறுவனத்தின் செயல் இயக்குநர் (மண்டல சேவைகள்) அரூப் சின்கா, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி நிறுவனத்தில் மண்டல மேலாளர் கே.கதிரேசன் கொடி ஏற்றினார். இதில், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ஏஜென்ட்கள் பங்கேற்றனர்.

காமராஜர் துறைமுகத்தில் அதன் தலைவர் சுனில் பாலிவால்தேசியக் கொடி ஏற்றினார். எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு (ஓஎன்ஜிசி) அலுவலகத்தில் நடந்த விழாவில், காவிரி பேசின் செயல் இயக்குநர் டாக்டர் கே.எஸ்.பூஷன் தேசியக் கொடி ஏற்றினார்.

சென்னை பெட்ரோலியம் கெமிக்கல்ஸ் (சிபிசிஎல்) மணலி சுத்திகரிப்பு ஆலையில் நடந்த சுதந்திர தின விழாவில், அதன் நிர்வாக இயக்குநர் எஸ்.என்.பாண்டே தேசியக் கொடியை ஏற்றிவைத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் மரியாதையை ஏற்றார். புரசைவாக்கத்தில் உள்ள பிஎஸ்என்எல் சென்னை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், அந்நிறுவனத்தின் பொதுமேலாளர் சஞ்சீவி கொடி ஏற்றினார்.

நுங்கம்பாக்கம், ஆயக்கர் பவனில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான முதன்மை தலைமை ஆணையர் எம்.எல்.கர்மாகர் கொடி ஏற்றினார்.

தெற்கு ரயில்வே சார்பில், பெரம்பூர் ரயில்வே விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவில், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் கொடி ஏற்றி வைத்து ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமை நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், அதன் மேலாண்மை இயக்குநர் பிரதீப் யாதவ் கொடி ஏற்றினார்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் மாநில தேர்தல் ஆணையர் முனைவர் பழனிசாமி கொடி ஏற்றினார்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் ந.காளிதாஸ் கொடி ஏற்றினார்.

சென்னை எழிலகத்தில் வருவாய் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா கொடி ஏற்றினார்.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், பல்கலைக்கழக துணைவேந்தர் மருத்துவர் சுதா சேஷய்யன் தேசிய கொடியை ஏற்றினார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்தில் நடந்த விழாவில், அதன் தலைவர் பங்கஜ்குமார் பன்சால் கொடி ஏற்றினார். சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் ஹரிஹரன் கொடி ஏற்றினார்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், ஆணையர் கோ.பிரகாஷ் கொடி ஏற்றினார்.

தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், வாரிய முதன்மை செயல் அலுவலர் மருத்துவர் தா.பரிதா பானு கொடி ஏற்றினார்.

இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆணையர் (பொ) விக்ரம் கபூர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

தெற்கு ரயில்வே சென்னை மண்டலம் சார்பில் நடைபெற்ற விழாவில், மண்டல ரயில்வே மேலாளர் பி.மகேஷ் கொடி ஏற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x