Published : 15 Aug 2020 06:29 PM
Last Updated : 15 Aug 2020 06:29 PM

எங்கள் மண்ணை நாங்களே மீட்டுக்கொள்கிறோம்!- சுதந்திர தினத்தில் வனத்திற்குள் குடியேறிய காடர் பழங்குடிகள்

வால்பாறை

சுதந்திர தினமான இன்று நடந்திருக்க வேண்டிய கிராம சபைக் கூட்டங்கள், கரோனா காரணமாக அரசால் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், வால்பாறை கல்லாறு பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்களுக்குத் தாங்களே கிராம சபை கூட்டம் நடத்தி, ‘நாங்கள் எங்கள் தாய் மண்ணான தெப்பக்குள மேட்டில் குடியேற கிறோம்’ என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். அவ்வண்ணமே செய்தும் காட்டியிருக்கிறார்கள்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கல்லாறு, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குள் வரும் அடர்ந்த கானகப் பிரதேசத்தில் அமைந்திருக்கிறது. காடர் இன பழங்குடிகள் சுமார் 100 பேர் இங்கு காலங்காலமாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கான செட்டில்மென்ட் நிலத்தில் ராகி, கம்பு, அவரை, துவரை எனப் பாரம்பரிய உணவு தானியங்கள் பயிரிட்டு வந்தவர்கள் காலப் போக்கில் மிளகு விவசாயமும் செய்கின்றனர். காடுகளுக்குள் சென்று தேன். குங்குலியம் போன்ற மலைப் பொருட்கள் சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுடைய வசிப்பிடத்தின் குறுக்காக ஓடுவது இடைமலையாறு. இது மண் அரிப்பு மிக்கது. இவர்கள் வாழ்க்கைக்கு ஆதாரமும் இதுவே. விவகாரமும் இதுவே. அடிக்கடி பெய்யும் மழையால் மெல்ல மெல்ல மண் சரிந்து ஆற்றுக்குள் சென்றுவிட்டது. இப்படி மட்டும் கடந்த காலங்களில் இவர்கள் விவசாயம் செய்து வந்த 50 ஏக்கர் நிலங்கள் பள்ளத்தாக்குக்குள் சென்றுவிட்டன.

2019 ஆகஸ்ட் மாதம் பெய்த கடுமழையில் 10 ஏக்கர் மண் பள்ளத்தாக்கில் சரிந்தது. அதில் 4 வீடுகள் அடியோடு நாசமாகிவிட்டன. மேலும் சில வீடுகளிலும் சேதம் ஏற்பட்டது. இதையடுத்து குடிசைகளைக் காலி செய்துவிட்டு இங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தெப்பக்குளமேடு செட்டில்மென்ட் பூமியில் வந்து குடிசைகளைப் போட்டனர் இப்பழங்குடிகள். இயற்கைச் சூழலுக்கு ஏற்ப தங்கள் குடியிருப்புகளை இடமாற்றிக்கொள்வது இவர்களின் வழக்கம். இந்த முறை இப்படியான சூழலில் வீடுகள் மாற்றிக்கொள்வது குறித்து வருவாய்த் துறை, போலீஸ், வனத் துறை ஆகியவற்றுக்குத் தகவல் கிடைத்தது.

புலிகள் காப்பகம் திட்டத்தின் மூலம் இவர்களை வெளியேற்ற தீவிரமாக முயன்றுவந்த வனத் துறையினர் இந்த விஷயத்தை வாகாகப் பிடித்துக்கொண்டனர். தெப்பக்குளமேடு என்ற அந்த இடத்தில் குடியேற விடாது தடுத்தனர். குடிசைகளைப் பிரித்து எறிந்தனர். குடிசைகள் தீ வைத்தும் கொளுத்தப்பட்டன.

இதையடுத்து, வீடிழந்த பழங்குடியினர் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பில் கட்டாயமாகத் தங்க வைக்கப்பட்டனர். மிகவும் பழுதான 4 வீடுகளில் 23 குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டது இவர்களுக்கு மேலும் துயரத்தை ஏற்படுத்தியது. இவர்களின் அவல நிலை அறிந்த தன்னார்வலர்கள், பழங்குடியினச் செயல்பாட்டாளர்கள் இவர்களுக்கு ஆதரவாகப் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து தாசில்தார், சப் கலெக்டர் முன்னிலையில் வனத் துறையினர், போலீஸார், பழங்குடியினர் தலைவர்கள் என முத்தரப்பு பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டன.

‘தெப்பக்குளமேட்டில் குடியேற வேண்டும். அங்கிருக்கும் செட்டில்மென்ட் பூமியில் விவசாயம் செய்ய தொந்தரவு செய்யக்கூடாது. காலங்காலமாக நாங்கள் வசித்துவரும் இந்த நிலங்களுக்குப் பட்டா வழங்க வேண்டும்’ என்பதுதான் இந்தப் பழங்குடியினர் கோரிக்கை. இதற்கு போலீஸ், வருவாய்த் துறை போன்றவை அனுமதித்தாலும் வனத் துறை அனுமதிப்பதாக இல்லை. இதனால் ஒரு வருடமாக நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டன. இப்படியான சூழலில், இந்த ஆண்டு சுதந்திர தினத்திலாவது தங்கள் சொந்த நிலத்துக்குத் திரும்பிவிடுவோம் என்று இம்மக்கள் காத்திருந்தனர். ஆனால், கரோனா சூழ்நிலை வனத் துறைக்கே சாதகமாக இருக்கவே, இம்மக்கள் கொந்தளித்துவிட்டனர்.

‘வனத் துறையினரிடமிருந்து சுதந்திரம் கோரி சுதந்திர தினத்தன்று தாய் முடி எஸ்டேட் குடியிருப்பிலிருந்து மானம்பள்ளி வனச்சரகர் அலுவலகம் வரை நடைப் பயணம் மற்றும் அலுவலக முற்றுகை அறவழிப் போராட்டம் நடத்தப்படும்’ என இப்பழங்குடியினர் அறிவித்தனர். இதையடுத்து நேற்று முதலே வனத் துறையினர் மூலம் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இதனால் போராட்டத்தைக் கைவிட்ட மக்கள், இன்று திடீரென்று கூட்டம் கூட்டினர். வன உரிமைச்சட்டம் 2006-ன் படி கிராம சபைக் கூட்டம் கூட்டியதாக அறிவித்தனர். தங்கள் நிலத்தில் தாங்களே குடியேறி தங்களின் சுதந்திரத்தை மீட்டெடுக்கப்போவதாகத் தீர்மானம் நிறைவேற்றினர். தொடர்ந்து தெப்பக்குளமேடு பகுதியில் பதாகைகளுடன் வந்து தர்ணா செய்து குடிசைகள் அமைக்கத் தொடங்கினர்.

இதுகுறித்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ராஜலட்சுமி என்ற பெண் கூறுகையில், “இந்த நிலம் எங்களுக்கான உரிமை. நாங்கள் எங்களுடைய நிலத்தை விட்டு வந்து ஒரு வருஷமாகிவிட்டது. இப்பவும் எங்களை இங்கிருந்து கீழ்நாட்டுக்கு அனுப்புவதில்தான் வனத் துறையினர் குறியாக இருக்கிறார்கள். இதுவரையிலும் இதுபோல நாங்கள் எங்கள் காட்டையும், வீட்டையும் விட்டு இப்படிப் பிரிந்ததில்லை. எங்களுடைய காட்டில் சாக்கடை, குப்பை, கொசு எதுவும் இல்லை.

ஆனால், இங்கே அதுதான் நிறைந்து கிடக்கிறது. இங்கு வந்த நாள் முதலே பலருக்கும் உடம்புக்கு முடியாமல் போகிறது. அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இதுவரை ஒருமுறைகூட எங்கள் பகுதியை எட்டிக்கூடப் பார்க்கவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டுத்தான் எங்களுடைய நிலத்தை நாங்களே எடுத்துக்கொள்ள துணிந்து இந்தப் போராட்டத்தில் இறங்கியிருக்கிறோம்” என்றார்.

தகவல் அறிந்து தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் இம்மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த விரைந்துள்ளனர்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x