Published : 14 Aug 2020 08:32 AM
Last Updated : 14 Aug 2020 08:32 AM

கரோனா தடுப்புக்கான மரங்கள் சமூக காடுகளில் வெட்டப்படுகிறதா?- அரசு உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படும் மரங்கள் சமூகக் காடுகளில் இருந்து வெட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் நகராட்சியைச் சுற்றி வனத்துறை காப்புக்காடு மற்றும் சமூகக் காடுகள் ஏராளமாக உள்ளன. இதில் தைலம், வேம்பு உள்ளிட்ட பல்வேறு வகை மரங்கள் உள்ளன.

மறைமலைநகர் நகராட்சியில் கரோனா பாதித்த பகுதிகளில் கரோனா பரவலைத் தடுக்க அரசு மேற்கொள்ளும் தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக, பாதிக்கப்பட்டோரின் வீட்டைச்சுற்றி தகரம், சவுக்குக் கட்டை உள்ளிட்ட மரவகைகள் அடித்து தடுப்பு ஏற்படுத்தப்படுகிறது.

இந்தத் தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட மரங்கள் சமூகக் காடுகளில் இருந்து வெட்டப்படுவதாக செங்கல்பட்டு வனத் துறைக்கு புகார்கள் வந்தன.

இதேபோல் அருகில் உள்ள குடியிருப்புவாசிகளும், தொழிற்சாலைகளும் மரங்களைவெட்டுவதாக புகார் வந்தன. அதனடிப்படையில், மறைமலை நகர் அருகே சட்டமங்களத்தில் வனத் துறையினர் ஆய்வு செய்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்து செங்கல்பட்டு வனத் துறை அலுவலர் பாண்டுரங்கனிடம் கேட்டபோது, `‘காப்பு காடுகள் மட்டுமே வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. சமூகக் காடுகள் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால், தற்போது சமூகக் காடுகளில் இருந்து மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. மேலும் மறைமலை நகர் நகராட்சியில் கரோனா தடுப்பு பணிக்கு பயன்படுத்த மரங்கள் வெட்டப்படுவதாக அப்பகுதியில் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது’’ என்றார்.

மரங்களை நாங்கள் வெட்டவில்லை

இதுதொடர்பாக மறைமலை நகர் நகராட்சிப் பொறியாளர் வெங்கடேஷ் கூறியதாவது: நாங்கள் முறையாக டெண்டர் விட்டு கடைகளில் சவுக்கு மரங்களை வாங்கித்தான் தடுப்பு பணிக்கு பயன்படுத்துகிறோம். சமூகக் காடுகளில் உள்ள மரங்களை வெட்டவில்லை என தெரிவித்தார்.

சமூக காடுகளுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்று வனத் துறையினரும், மரங்களை நாங்கள் வெட்டவில்லை என்று நகராட்சி நிர்வாகமும் மறுப்பு தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சமூகக் காடுகளுக்கு யார் பொறுப்பு? அவற்றைப் பாதுகாப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

எனவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு சமூகக் காடுகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனசமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x