Published : 13 Aug 2020 08:52 AM
Last Updated : 13 Aug 2020 08:52 AM

2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் போட்டியிட தொகுதிகளை தேர்வு செய்வதில் அதிமுக., திமுக.வில் கடும் போட்டி: அதே தொகுதியில் போட்டியிட தயங்கும் அமைச்சர் 

கோப்புப் படம்

மதுரை

வரவிருக்கும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதி களில் தங்களுக்குப் பாதுகாப்பான தைத் தேர்ந்தெடுக்கும் பணியில் அதிமுக-திமுக நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் 2021-ம் ஆண்டு மே மாதம் நடக்கவுள்ளது. கரோனா பாதிப்பால் தேர்தல் பணிகளில் கட்சியினர் இன்னும் தீவிரம் காட்டாத நிலை உள்ளது. எனினும் வெற்றி பெறுவதற்கான திட்டங்களைத் தயார் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைத் தேர்வு செய்வதில் அதிமுக, திமுக முக்கிய நிர்வாகிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்போதே தங்க ளுக்கான தொகுதிகளை முடிவு செய்துவிட்டால் மற்ற தொகுதி களில் ஆதரவாளர்களை களம் இறக்கலாம் எனக் கருதுகின்றனர்.

இது குறித்து கட்சியினர் கூறிய தாவது: அமைச்சர் ஆர்.பி.உதய குமார் மீண்டும் திருமங்கலம் தொகுதியிலேயே போட்டியிட முடிவு செய்துள்ளார். இவரை எதிர்த்து திமுக.வில் வலுவான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என திமுக தலைமை திட்டமிட் டுள்ளது. உதயகுமார் மாவட்டச் செயலாளராக உள்ள உசிலம்பட்டி, சோழவந்தான் தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் ரகசியம் காக்கப் படுகிறது. அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மதுரை மேற்குத் தொகுதியில் மீண்டும் போட்டியிட தயக்கம் காட்டினாலும், தொகு தியை மாற்ற முடியாத சூழலும் உள்ளது. மதுரை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளர் பழனிவேல் தியாகராஜன் மீண்டும் போட்டியிடுவது உறுதி என்ற சூழலில், வடக்கு,கிழக்கு, தெற்கு தொகுதிகள் தனது வெற்றிக்கு பாதுகாப்பாக இருக் காது என அமைச்சர் கருதுகிறார். மேற்குத் தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் கோ.தளபதியே போட்டியிட வாய்ப்புள்ளது.

மதுரை வடக்குத் தொகுதியில் போட்டியிட திமுகவினர் மத்தியில் முன்னாள் மேயர் குழந்தைவேலு உள்ளிட்ட பலரிடம் கடும் போட்டி நிலவுகிறது. தெற்குத் தொகுதி கூட்டணிக்குப் போகலாம் என்ற பேச்சு உள்ளதால் திமுகவினர் தயங்குகின்றனர். எம்எல்ஏ வி.வி.ராஜன் செல்லப்பா மதுரை வடக்குத் தொகுதியிலிருந்து திருப்பரங்குன்றம் தொகுதிக்கு மாறத் திட்டமிட்டுள்ளார். இவர் மாவட்டச் செயலாளராக உள்ள மேலூரில் முன்னாள் எம்எல்ஏ. தமிழரசன், தற்போதைய எம்எல்ஏ. பெரியபுள்ளான் ஆகியோர் போட்டியிட முயற்சிக்கின்றனர்.

மதுரை கிழக்கில் திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ பி.மூர்த்தி மீண்டும் போட்டியிடுவது உறுதி என்பதால், இத்தொகுதியைத் தேர்வு செய்ய அதிமுக.வினர் தயங்குகின்றனர். பெரிய புள்ளானுக்கு மீண்டும் மேலூர் ஒதுக்கப்பட்டால், தமிழரசன் கிழக்குத் தொகுதியில் போட்டியிடலாம். திமுக எம்எல்ஏ. மருத்துவர் சரவணன் மதுரை வடக்கு தொகுதியைக் குறி வைக்கிறார். இவருக்கு திருமங்கலத்தை ஒதுக்க கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வருகிறது.

இத்தகைய சூழல் வந்தால் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன் திருப்பரங்குன்றத்தில் போட்டியிடும் நிலை ஏற்படலாம். மதுரை தெற்குத் தொகுதியில் மீண்டும் போட்டியிட அதிமுக எம்எல்ஏ எஸ்.எஸ்.சரவணன் விரும்புகிறார். உசிலம்பட்டியில் எம்எல்ஏ பா.நீதிபதி, சோழவந்தானில் எம்எல்ஏ. மாணிக்கம் ஆகியோர் அதிமுக.வில் போட்டியிட முயற்சிக்கின்றனர்.

திமுக சார்பில் வேட்பாளர்கள் தேர்வு கடைசி நேரத்தில்தான் முடிவாகும். மதுரை மத்தி, வடக்கில் போட்டியிட அதிமுக.வினர் இடையே பெரிய அளவில் ஆர்வம் இல்லாததும் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x