Published : 07 Aug 2020 06:27 AM
Last Updated : 07 Aug 2020 06:27 AM

கரோனா பாதிப்பில் உயிரிழந்த மருத்துவர், செவிலியர், காவல் துறையினர் உட்பட 28 அரசு அலுவலர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம்- மாவட்ட நிர்வாகங்களுக்கு நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

சென்னை

தமிழகத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர், செவிலியர், காவல் துறையினர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் 28 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணத் தொகை வழங்க அரசாணைவெளியிடப்பட்டுள்ளது.

‘‘கரோனா தடுப்பு பணியின் போது உயிரிழக்கும் மருத்துவம், காவல் உள்ளிட்ட பல்வேறு துறையினரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கப்படும்’’ என்றுமுதல்வர் பழனிசாமி கடந்த ஏப்.22-ம்தேதி அறிவித்தார். அதன்படி, மாவட்ட வாரியாக பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தற்போது 28 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வருவாய்த் துறை சார்பில் தலைமைச் செயலர்கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

முதல்வரின் நிவாரண அறிவிப்பைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்கள், பல்வேறு துறைத் தலைவர்கள் அனுப்பிய அறிக்கைகள் அடிப்படையில், வருவாய் நிர்வாக ஆணையர் விவரங்களை அரசுக்கு சமர்ப்பித்தார். இவற்றை கவனமாக ஆய்வு செய்து, கரோனா பணியின்போது உயிரிழந்த 28முன்களப் பணியாளர்கள் குடும்பங்கள் மற்றும் சட்டரீதியான வாரிசுகளுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை மாநகராட்சி பணியாளர்கள் எஸ்.சேகர், அரியநாயகி, எஸ்.டில்லிபாபு, ஜே.சங்கர், எம்.தேவராஜ், இ.பசவம்மா, எஸ்.ஆறுமுகம், சுகுமாறன், ஆவடி நகராட்சி வருவாய்ஆய்வாளர் வி.தர், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி பணியாளர் கே.நடராஜன், விருதுநகர் சுந்தரபாண்டியம் பேரூராட்சி செயல் அலுவலர் எம்.மோகன் கென்னடி, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கே.சுவாமிநாதன், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை டீன் எஸ்.சுகுமாறன், திருச்சி கள்ளமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் எஸ்.பிச்சைமணி ஆகியோரது குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படுகிறது.

மேலும், சேலம் ஏற்காடு மருந்தாளுநர் கே.பி.சண்முகம், சென்னை மாம்பலம் காவல் ஆய்வாளர் எஸ்.பாலமுரளி, பட்டினப்பாக்கம் காவல்நிலைய சிறப்பு எஸ்.ஐ. சி.ஆர்.மணிமாறன், விருதுநகர் ராஜபாளையம் காவல்நிலைய தலைமை காவலர் வி.அய்யனார், சென்னை ஆயுதப்படை 2-ம் நிலை காவலர் எம்.நாகராஜன், திருநெல்வேலி மாநகர் காவல் ஆய்வாளர் சாது சிதம்பரம், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆய்வாளர் பி.குருமூர்த்தி, காஞ்சிபுரம் பாலுசெட்டிசத்திரம் உதவி ஆய்வாளர் எம்.பழனி, தஞ்சை கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெய்சங்கர், கடலூர் மாவட்ட தாசில்தார் இ.கவியரசு, காஞ்சிபுரம் விஏஓ வி.ராஜாராம், விருதுநகர் மாவட்ட கிராம உதவியாளர் எம்.முருகேசன், சென்னை சைதாப்பேட்டை கூட்டுறவு சங்க விற்பனையாளர் எஸ்.சுரேஷ்குமார், மதுரை நியாயவிலைக் கடை விற்பனையாளர் டி.சந்திரலிங்கம் ஆகியோரது குடும்பங்களுக்கும் ரூ.25 லட்சம் வழங்கப்படுகிறது.

மாவட்ட நிர்வாகங்களுக்கு இந்த நிவாரண நிதி அனுப்பப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் அல்லது சட்டப்படியான வாரிசுகளிடம் இத்தொகையை அளித்து, பெற்றுக் கொண்டதற்கான கையொப்பம் பெற்ற படிவத்தை அரசுக்கு அனுப்ப வேண் டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x