Published : 10 Sep 2015 08:48 AM
Last Updated : 10 Sep 2015 08:48 AM

சோழவரம் ஏரி முற்றிலும் வறண்டது: சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம் - பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் ஏரி நீர்மட்டம் சரிவு

பொய்த்துப் போன மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில், சோழவரம் ஏரி முற்றி லுமாக வறண்டு விட்டது. மற்ற ஏரிகளான பூண்டி, செம்பரம் பாக்கம், புழல் ஏரிகள் வறண்டு கொண்டிருப்பதால், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.

174 சதுர கிலோ மீட்டர் பரப்பள வாக இருந்த சென்னை மாநக ராட்சி, தற்போது, 426 சதுர கிலோ மீட்டராக பரந்து விரிந்துள்ளது. மக்கள் தொகை 80 லட்சத்தை தாண்டி விட்ட சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு நாள் ஒன்றுக்கு 900 முதல், 1000 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவை. ஆனால், சென்னைக் குடிநீர் வாரியம் இதுவரை அதிக பட்சமாக ஒரு நாளுக்கு 580 மில்லியன் லிட்டர் குடிநீரே வழங்கி வருகிறது.

அதுவும் சென்னை மாநகராட்சி யின் அனைத்து பகுதிகளிலும் நாள் தோறும் குடிநீர் விநியோகிக் கப்படவில்லை. மாறாக, ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் விநி யோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வரும் சோழவரம், பூண்டி, செம் பரம்பாக்கம், புழல் ஏரிகளின் நீர் இருப்பு அதலபாதாளத்துக்குச் சென்றுள்ளது. சமீபகாலமாக மழை பொய்த்துப் போனதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

சோழவரம் ஏரி கடந்த 6 மாதங்களாக வறண்டு கிடக்கிறது. 881 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியின் நீர் இருப்பு பூஜ்யமாகிவிட்டதால், தற்போது ஏரியில் மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண் டிக்கிறார்கள்.

அவ்வப்போது, சில மி.மீ., மழை பெய்தாலும் அந்நீர் ஏரியின் நீர்ப் பிடிப்பு பகுதிக்கு முழுமையாக வந்து சேருவதில்லை. ஏரி பகுதி களில் சவுடு மண் குவாரி செயல்பட அனுமதித்ததால் உருவான மெகா பள்ளங்கள்தான் காரணம் என கூறப்படுகிறது. கண்டலேறு அணை வறண்டுவிட்டதால், பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு நேற் றைய நிலவரப்படி 57 மில்லியன் கன அடியாகிவிட்டது. இதனால் பூண்டி ஏரியிலிருந்து, சென்னைக் குடிநீருக்கு நீர் எடுப்பது, 20 நாட்களுக்கு முன்பே நிறுத்தப் பட்டுவிட்டது.

அதேபோல் செம்பரம்பாக்கம் ஏரி ஒரு மாதத்துக்கும் மேலாக வறண்டு கொண்டு வருகிறது. 3,645 மில்லியன் கன அடி கொள் ளளவு கொண்ட இந்த ஏரியின் நீர் இருப்பு, நேற்றைய நிலவரப்படி 132 மில்லியன் கன அடியாகிவிட்டது. இதனால், வினாடிக்கு 46 கன அடி நீர் மட்டுமே சென்னையின் குடிநீர் தேவைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

3,300 மில்லியன் கன அடி கொள் ளளவு கொண்ட புழல் ஏரியில், நேற்றைய நிலவரப்படி 132 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருக்கிறது. நீர் மட்டமும் வெகுவாக குறைந்து விட்டதால், வழக்கமான நீரேற்று குழாய்களுக்கு பதில், ஜெனரேட்டர் மூலம் வினாடிக்கு 78 கன அடி நீர் உறிஞ்சப்பட்டு, சென்னையின் குடிநீர் தேவைக்காக சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப் பப்பட்டு வருகிறது.

இருப்பினும், நெம்மேலி, மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையிலிருந்து பெறப்படும் நீர், திருவள்ளூர் மாவட்ட விவசாய கிணறுகளிலிருந்து வாடகைக்கு பெறப்படும் நீர் உள்ளிட்டவை மூலம் சென்னையின் குடிநீர் தேவையை ஓரளவு, சென்னைக் குடிநீர் வாரியம் பூர்த்தி செய்து வருகிறது.

இவ்வாறு சோழவரம், பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளின் நீர் இருப்பு தற்போதைய நிலை யிலேயே தொடருமானால் சென் னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x