Published : 04 Aug 2020 01:43 PM
Last Updated : 04 Aug 2020 01:43 PM

மாணவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து முட்டைகள் வழங்கலாம்; உறுதிப்படுத்த வேண்டும்; தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

சென்னை

ஊரடங்கு காரணமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படாமல் இருந்த முட்டைகளை வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்கள் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க, திட்டம் வகுக்கக் கோரி வழக்கறிஞர் சுதா சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சத்துணவுக் கூடங்கள் மூடப்பட்டுள்ள போதிலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மூலம், குழந்தைகள், வளர் இளம் பெண் குழந்தைகள், கர்ப்பம் தரித்துள்ள பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அரசி, பருப்பு, சத்துமாவு, முட்டை ஆகியவற்றை அங்கன்வாடி பணியாளர்கள் சம்பந்தப்பட்டவர்களின் வீட்டுக்கே நேரடியாகச் சென்று வழங்கி வருவதாகவும், இதன் மூலம் இந்த ஊரடங்கு காலகட்டத்திலும் 33 லட்சத்து 12 ஆயிரத்து 629 பேர் பயனடைந்துள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

மேலும், சத்துணவுத் திட்டத்தின் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் 42 லட்சத்து 61 ஆயிரத்து 124 மாணவ, மாணவியருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதேபோல, ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையச் செவிலியர்கள் மூலம் 23.86 லட்சம் வளர் இளம் பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு 71.59 லட்சம் நாப்கின்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

வழக்கு விசாரணையின்போது ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் மற்றும் சிறப்பு அரசு பிளீடர் ஆர்.முத்துக்குமார் ஆகியோர், கரோனா தொற்று பரவி வருவதால் மாணவர்களைத் தினமும் பள்ளிகளுக்கு அழைத்து இலவச முட்டைகள் வழங்குவது பாதுகாப்பாக இருக்காது எனவும், இத்தகைய சூழலில் முட்டை கொள்முதல் செய்வதில் சில இடர்ப்பாடுகள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து வழக்கில் இன்று (ஆக.4) உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், ஏற்கெனவே சத்துணவுத் திட்டத்தின் கீழ் வழங்கி வந்த முட்டைகள், ஊரடங்கு சூழலால் தடைப்பட்டு விடக்கூடாது என்பதால் மாணவர்களுக்கு அரசு தொடர்ந்து முட்டை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், மாணவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து முட்டைகள் வழங்கலாம் எனவும், அதே நேரத்தில் முட்டைகளைத் தினந்தோறும் வழங்குவதா, வாரம்தோறும் மொத்தமாக வழங்குவதா உள்ளிட்ட விஷயங்களை அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், ஏழை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை எப்படி விநியோகிப்பது என்பது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x