Published : 04 Aug 2020 08:14 AM
Last Updated : 04 Aug 2020 08:14 AM

ராணிப்பேட்டையில் கரோனா தொற்றால் உயிரிழந்த அரசு மருத்துவமனை செவிலியர் உடலை அடக்கம் செய்யவிடாமல் எதிர்த்ததாக புகார்

ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அர்ச்சனா (35). இவர், ஆற்காட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து, அர்ச்சனாவின் உடலை ராணிப்பேட்டை நவல்பூர்

பகுதியில் உள்ள பழமையான கல்லறைத் தோட்டத்தில் புதைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

இதற்கிடையில், கல்லறைத் தோட்டத்தில் குறிப்பிட்ட இடத்தில் அடக்கம் செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து அலைக்கழித்தனர். இந்த தகவலறிந்த சார் ஆட்சியர் இளம்பகவத், டிஎஸ்பி பூரணி ஆகியோர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பாதுகாப்பு விதிகளை முறை யாக கடைபிடித்து அதிகளவிலான கிருமி நாசினிகளை பயன்படுத்தி செவிலியர் அர்ச்சனாவின் உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் எதிர்ப்பை கைவிட்டனர், சுமார் 2 மணிநேர அலைக் கழிப்புக்கு பிறகு செவிலியரின் உடல் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.

முதியவர் உயிரிழப்பு

ஆற்காட்டைச் சேர்ந்த 73 வயது முதியவர் கரோனா தொற்றால் நேற்று உயிரிழந்தார். அவரது உடலை பாலாற்றங்கரையில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யாமல் அருகில் உள்ள மற்றொரு பகுதி மக்கள் பயன்பாட் டில் இருக்கும் மயானத்தில் அடக் கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். இதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்த ஆற்காடு வட்டாட் சியர் காமாட்சி விரைந்து சென்று சமாதானம் செய்தார். பின்னர், இறந்த முதியவரின் பகுதியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x