Published : 02 Aug 2020 09:19 AM
Last Updated : 02 Aug 2020 09:19 AM

குழந்தைத் தொழிலாளர்களாக மாறும் மலைக் கிராமத்து மாணவர்கள்! - அரசு தலையிட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

கரும்பு வெட்டும் பணியில் மாணவ மாணவிகள்.

“கரோனா பொதுமுடக்கம் நீடிச்சுட்டே போகுது. பள்ளிக்கூடம் திறக்கிற மாதிரி தெரியலை. வீட்ல பெரிய வருமானம் இல்லை. அதனால, கிடைக்கிற வேலைகளைச் செஞ்சு சம்பாதிக்கிறோம்”

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் மலைக் கிராமங்களுக்குள் வசிக்கும் பெரும்பாலான பள்ளிப் பிள்ளைகள் இப்போது இப்படித்தான் சொல்கிறார்கள்.

ஆம், இங்கு பள்ளிகளில் படித்துக்கொண்டிருந்த பிள்ளைகளில் பாதிக்கும் மேற்பட்டோர் கரும்பு வெட்டுக் கூலிக்கும், விவசாயப் பண்ணைகளுக்கும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். சிலர் ஆடு, மாடு, எருமை வாங்கி மேய்க்கத் தொடங்கிவிட்டார்கள். வேலைக்குச் செல்லும் சிறார்களுக்குத் தினக்கூலியாக ரூ.150 முதல் ரூ. 200 வரை கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், “இப்படி வேலை செய்யப் பழகிவிட்ட சிறார்கள் மீண்டும் பள்ளிக்குத் திரும்புவார்களா என்பது கேள்விக்குறிதான். அரசு ஏதாவது செய்யாவிட்டால் பழங்குடியின குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும்” என கவலை தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

பர்கூர் மலைகளில் 36 மலைக் கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் ஒரு மேல்நிலைப் பள்ளி, 4 உயர்நிலைப் பள்ளிகள், 15 நடுநிலைப் பள்ளிகள், 5 ஆரம்பப் பள்ளிகள் என மொத்தம் 25 அரசுப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 1,500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயில்கின்றனர். இதைத் தவிர மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின் கீழ் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தில் ‘சுடர்’ தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தும் 6 குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளிகளும் உள்ளன. இவற்றில் சுமார் 500 பிள்ளைகள் படிக்கின்றனர்.

கரோனா பொது முடக்கம் காரணமாக இப்பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. முடக்கம் தளர்த்தப்பட்டதால் இப்போது பெற்றோர் வேலைக்கு செல்லும் நிலையில், பல இடங்களில் குழந்தைகளும் அவர்களுடனே வேலைக்குச் செல்கின்றனர். இதன் காரணமாக, மலைக் கிராமங்களில் படித்துவரும் குழந்தைகள், படிப்பைக் கைவிட்டு குழந்தைத் தொழிலாளர்களாக மாறிவருகின்றனர்.

இதுகுறித்து ‘சுடர்’ தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் நடராஜன் நம்மிடம் பேசுகையில், “மலைப் பகுதிகளில் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் விவசாயம். வானம் பார்த்த பூமி என்பதால் 4 மாதங்களுக்கு மட்டுமே வேலை இருக்கும். இதனால் ஏராளமான மக்கள் பிழைப்புத் தேடி சமவெளிப் பகுதிக்குச் செல்கின்றனர். கரும்பு வெட்டும் வேலை, மரவள்ளிக்கிழங்கு அறுவடை போன்ற அதிக உடல் உழைப்பு வேலைகளை அவர்கள் செய்கின்றனர். இதே வேலைகளில் குழந்தைகளையும் ஈடுபடுத்துகின்றனர்.

t1

இத்தகைய இடங்களிலிருந்து மீட்கப்படும் குழந்தைகள், மீண்டும் மலை கிராமங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, 8-ம் வகுப்பு வரை குழந்தை தொழிலாளர் சிறப்புப் பள்ளிகளில் கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு அடிப்படை கல்வி கிடைத்து வந்தது. மாணவர்களுக்கு மாதம்தோறும் உதவித்தொகையும் வழங்கப்பட்டு வந்தது. ரூ.150 ஆக இருந்த மாத உதவித்தொகை, கடந்த 2017 பிப்ரவரி மாதம் ரூ.400 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. ஆனால், 3 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில் இதுவரை ஒரு மாதத்துக்குகூட உதவித் தொகை வங்கிக் கணக்கில் போடப்படவில்லை. இதனால் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் ஆர்வம் பெற்றோரிடம் குறைந்துவருகிறது.

இதற்கிடையே, கரோனா பொதுமுடக்கம் காரணமாக இந்தச் சிறார்கள் குழந்தைத் தொழிலாளர்களாக மாறும் சூழல் உருவாகிவிட்டது. இவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, திரும்பப் பள்ளிக்கு அழைத்து வருவது எளிதான செயல் அல்ல. இப்போது பள்ளிக் குழந்தைகளுக்கு ஆன்லைன் கல்வியா, தொலைக்காட்சி வழி கல்வியா என்ற சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், இப்பகுதிகளில் செல்போன் சிக்னல் கிடைக்காது என்பதால் அதெல்லாம் எந்தளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.

ஒருவேளை அப்படியான சாத்தியக்கூறு அமைந்தால் இக் குழந்தைகளை ஒருங்கிணைத்து வெட்டவெளியில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து தொலைக்காட்சி வழி கல்வியைக் கற்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு ஒருங்கிணைப்பாளர்களாக உள்ளூரில் உள்ள ப்ளஸ் டூ படித்த இளைஞர்கள், ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களைப் பயன்படுத்தலாம் (வெளியூரிலிருந்து வந்தால் தொற்று பரவிட வாய்ப்பு உண்டு). இதை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செய்ய அரசு உத்தரவிடலாம். கல்வியின் வாசலில் காலடி எடுத்துவைத்த பழங்குடியினக் குழந்தைகள் பாதியில் வெளியேறுவதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x