Last Updated : 31 Jul, 2020 09:19 PM

 

Published : 31 Jul 2020 09:19 PM
Last Updated : 31 Jul 2020 09:19 PM

புதுச்சேரியில் ஆக.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு; ஞாயிறுகளில் முழு ஊரடங்கு இல்லை- முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரியில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கிடையாது என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

மத்திய அரசு மூன்றாம் கட்ட ஊரடங்குத் தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், புதுச்சேரியில் அமல்படுத்த வேண்டிய தளர்வுகள் குறித்து முடிவுகள் எடுக்க முதலவர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று (ஜூலை 31) மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்குப்பின் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ''மத்திய அரசு அறிவித்துள்ள மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வுகளில் ஒரு சில கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் திறக்கக்கூடாது என்றும், திருமண நிகழ்ச்சிகளில் 50 பேரும், துக்க நிகழ்ச்சிகளில் 20 பேரும் மட்டுமே பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில்கள், விமான போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜிம், யோகாசனக் கூடங்கள் ஆகஸ்ட் 5 முதல் திறக்கலாம் என அறிவிக்கப்பட்டாலும் அதற்கான விதிமுறைகளை விரைவில் அறிவிப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. வழிபாட்டுத் தலங்களுக்கும் சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

சுதந்திர தினத்தில் முதல்வர் கொடியேற்றி அணிவகுப்பை ஏற்கலாம் என்றும், சுதந்திர தின உரையாற்றலாம் என்றும், விழாவில் முக்கிய நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என்றும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்களுக்கு முன்னுரிமை அளித்து அழைக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நடைமுறைகள் புதுச்சேரியில் அமல்படுத்தப்படும்.

புதுச்சேரியில் கடைகள், மால், ஓட்டல்களைத் திறக்க ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடைகள் காலை 6 முதல் இரவு 8 மணி வரை திறக்கப்பட்டு வரும் நிலையில், இனிமேல் இரவு 9 மணி வரை திறக்க அனுமதிக்கப்படும். மேலும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு இரவு 9 முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும். புதுச்சேரி மாநிலத்தில் கரோனா படிப்படியாக அதிகரித்து வருவதால் பொதுமக்கள் நலன் கருதி சில கட்டுப்பாடுகள் மட்டும் விதிக்கப்பட்டுள்ளன. மாநில எல்லைக்குள் வர இ-பாஸ் நடைமுறை தொடரும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கிடையாது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு செய்தால் சனிக்கிழமை கூட்டம் அதிகரித்து கரோனா பரவ வாய்ப்பு உருவாகும். மாஹே பிராந்தியத்தில் கேரள அரசு எடுக்கும் நடைமுறையும், ஏனாம் பிராந்தியத்தில் ஆந்திர அரசு எடுக்கும் நடைமுறையும் கடைபிடிக்கப்படும். நான் கூறியுள்ளது போன்று கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள் மூடுவது, வழிபாட்டுத்தலங்களில் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

அரசியல் கட்சி கூட்டங்கள் நடத்துவது, ஊர்வலம் செல்வது போன்றவை விதிமுறைகள் அனைத்தும் மாஹே, ஏனாம் பிராந்தியங்களுக்கும் பொருந்தும். மேலும் சில தளர்வுகள் குறித்து அடுத்த 10 நாட்களுக்குப் பிறகு அமைச்சரவை கூடி முடிவு செய்யும்.''

இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x