Published : 27 Sep 2015 10:50 AM
Last Updated : 27 Sep 2015 10:50 AM

திருச்சி விமான நிலையத்திற்கு மன்னன் பெரும்பிடுகு முத்தரையர் பெயர் சூட்ட ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்மொழி வளர்ச்சிக்கு பாடுபட்ட பெரும்பிடுகு முத்தரையர் பெயரை திருச்சி விமான நிலையத்துக்கு சூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

திருச்சி விமான நிலையத்திற்கு மாமன்னன் பெரும்பிடுகு முத்தரையர் பெயர் சூட்டப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

நாட்டிற்கு சேவை செய்த தலைவர்கள் மற்றும் நாட்டுக்கு பெருமை சேர்த்த தலைவர்களை பெருமைப் படுத்தும் வகையில் அவர்களின் பெயர்களை வானூர்தி நிலையங்களுக்கும், பிற அமைப்புகளுக்கும் சூட்டுவது வழக்கமாக உள்ளது. சென்னை வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயரும், பன்னாட்டு முனையத்திற்கு பேரறிஞர் அண்ணா பெயரும் சூட்டப் பட்டிருக்கிறது. இதன்மூலம் அந்த தலைவர்களுக்கு பெருமை சேர்க்கப்பட்டிருப்பதுடன், சென்னை விமான நிலையத்தின் முனையங்களுக்கு சிறந்த அடையாளமும் கிடைத்திருக்கிறது.

தமிழகத்தில் உள்ள மற்ற விமான நிலையங்களுக்கும் இதேபோல் பெயர் சூட்ட மத்திய&மாநில அரசுகள் முன்வர வேண்டும். ஆனால், இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது நல்வாய்ப்புக்கேடானது.

திருச்சி விமான நிலையத்திற்கு மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் பெயரை சூட்ட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை ஆகும். வீரத்தின் விளைநிலமாக விளங்கியவர்; அண்டை நாட்டு மன்னர்களுடன் நல்லுறவைப் பேணியதுடன், போர்க்களங்களில் அவர்களுக்கு உதவியவர்; சேர, சோழ, பாண்டியர்கள் என மூவேந்தர்களின் ஆளுகைக்குள் இருந்த தரைப்பகுதிகளை பெரும்பிடுகு மன்னரும், அவரது வம்சாவளியினரும் ஆட்சி செய்ததாக அவர்களின் தலைநகராக விளங்கிய செந்தலையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் காட்டுகின்றன.

1300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழை வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டியவர். இத்தகைய சிறப்பு மிக்க பெரும்பிடுகு மாமன்னரின் பெயரை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு சூட்டுவது தான் அனைத்து வகைகளிலும் பொருத்தமானதாகும்.

ஏற்கனவே, திருச்சி மாவட்டத்திற்கு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஒரு கட்டத்தில் அனைத்து மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களின் பெயர்கள் மாற்றி அமைக்கப்பட்ட போது, திருச்சி மாவட்டத்தின் பெயரில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் பெயர் நீக்கப்பட்டது. திருச்சி விமான நிலையத்திற்கு பேரரசரின் பெயர் சூட்டப்படுவதற்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதை மதிக்கும் வகையில் திருச்சி விமான நிலையத்திற்கு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என்று பெயர் சூட்ட மத்திய அரசு முன்வர வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் உடனடியாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முன்வர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x